கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் பீ சீ ஆர் பரிசோதனைகளுக்கான புதிய ஆய்வுகூடம் திறந்து வைப்பு
செப்டம்பர் 09, 2020- பீ சீ ஆர் பரிசோதனைகள் நாளாந்தம் 300 ஆல் அதிகரிப்பு
கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் தொற்று நோய் மூலக்கூறினை கண்டறியும் புதிய ஆய்வக்கூடம் ஒன்று நேற்று (8) திறந்துவைக்கப்பட்டது. இதன்மூலம் இலங்கையில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பீ சீ ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையினை மேலும் 300ஆல் அதிகரிக்கமுடியும் என தெரிவிக்கப்படுகிறது.
தொற்று நோய் மூலக்கூற்றை கண்டறியும் இப்புதிய ஆய்வு கூடத்தினை கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் திறந்துவைக்கப்பட்டது.
இதனூடாக நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையினை மேலும் அதிகரிக்க ஒத்துழைப்பு வழங்குவதுடன், இப்புதிய ஆய்வுகூடதத்தின்மூலம் இலங்கை இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் சுமார் 300 பேருக்கு நாளாந்தம் கொவிட் -19 தொற்று நோய்க்கான பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வைராலஜிஸ்ட் மற்றும் நுண்ணுயிரியலாளர்களின் ஆலோசனைகளுக்கு அமைய கடும் கண்காணிப்பின்கீழ் தற்போது நாடுபூராகவும் 20 ஆய்வுகூடங்கள் நிறுவப்பட்டு பீ சீ ஆர் பரிசோதனைகளை மேகொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் நிறுவப்பட்ட இப்புதிய ஆய்வுகூடத்தை நிறுவும் திட்டத்தின் காரணகர்த்தாவாக கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக சேவையாற்றிய மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க திகழ்ந்ததுடன், அதனை நிறுவுவதற்கு சம்பத் வங்கி பி.எல்.சி, வரையறுக்கப்பட்ட டபிள்யூ.எஸ்.ஓ 2 லங்கா தனியார் நிறுவனம் மற்றும் இலங்கை பிஸ்கட் லிமிடெட் இணைந்து ரூபா 30 மில்லியன் நிதியுதவியினை அளித்துள்ளன.
இந்நிகழ்வில், இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ரசிக பெர்னாண்டோ மற்றும் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் பணிப்பாளர் பிரிகேடியர் கிருஷாந்தா பெர்னாண்டோ மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.