--> -->

எம்ரீ நியூ டயமண்ட் கப்பல் 50 கடல் மைல் தொலைவிற்கு அப்பால் -கடற்படை தெரிவிப்பு

செப்டம்பர் 10, 2020

நிர்கதிக்குள்ளாகியுள்ள எம்ரீ நியூ டயமண்ட் கப்பல் கல்முனை துறையில் இருந்து 50 கடல் மைல் தொலைவிற்கு அப்பால் இழுத்துச்செள்ளப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா  இன்று (10) தெரிவித்துள்ளார்.

இன்றிலிருந்து குறித்த நடவடிக்கையில் சிங்கப்பூர் டக் படகும் இணைந்துகொள்ளும் என அவர் மேலும் தெரிவித்தார்.     

கப்பலை அண்மித்த கடற்பரப்பில் எண்ணெய் மாதிரிகள் பெறப்பட்டு அவை தொடர்பான விசாரணைகளை உரிய அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இன்று (10) காலை 10.00 மணியளவில் உளவு நடவடிக்கைகளை மேற்கோள்வதற்காக சீனக்குடா விமான நிலையத்திலிருந்து பீச்கிராப்ட் ரக விமானம் ஒன்று சென்றுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.

குறித்த கப்பலை இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் கொண்டு செல்லுமாறு எம்ரீ நியூ டயமண்ட் கப்பல் உரிமையாளர் உட்பட அனைத்து வெளி நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி தர்ஷனி லஹண்டபுற தெரிவித்தார்.

இதேவேளை, சிங்கப்பூரை தளமாக கொண்ட சர்வதேச நிறுவனமான ஸ்மித் சிங்கப்பூர் தனியார் நிறுவனத்தின் பணியாளர்கள், எம்ரீ நியூ டயமண்ட் கப்பலின் நிலைமை குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tamil