தற்கொலை குண்டுதாரிகள் மரபணுப் பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டனர்

மே 22, 2019

மரபணுக்கள் தொடர்பான பரிசோதனை அறிக்கை, உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரிகளினது மரபணுக்களுடன் ஒத்துப்போயுள்ளதை அரச இரசாயனப் பகுப்பாயவுத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளதாக நேற்று மாலை பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டல் மற்றும் சினமன் ஹோட்டல் ஆகிய ஹோட்டல்களில் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்த மொஹம்மட் இப்றாஹிம் இல்ஹாம் அஹமட் மற்றும் மொஹம்மட் இப்றாஹிம் இன்ஷாப் அஹமட் ஆகிய இரு தற்கொலை தாரிகளினதும் மரபணுக்கள் அவர்களின் தந்தையான மொஹம்மட் இப்றாஹிமின் இரத்த மாதிரியுடன் ஒத்துப்போயுள்ளது.

இதேவேளை, கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தின் மீதான தாக்குதலை மேற்கொண்ட அச்சி மொஹம்மட் மொஹம்மட் ஹஸ்தூன் என்ற குண்டுதாரியின் மரபணு இவரது பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட இரத்த மாதிரியுடன் ஒத்துப் போயுள்ளது. கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட அலவூதீன் அஹமட் முஆத் என்ற தற்கொலைக் குண்டுதாரியின் மரபணு இவரது பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட இரத்த மாதிரியுடன் ஒத்துப் போயுள்ளது. தெஹிவளை ட்ரொபிகல் இன் ஹோட்டலில் மீதான தாக்குதலை மேற்கொண்ட அப்துல் லதீப் ஜமீல் மொஹம்மட் என்ற தற்கொலைக் குண்டுதாரியின் மரபணு இவரது மனைவி மற்றும் பிள்ளைகளிடமிருந்து பெறப்பட்ட இரத்த மாதிரியுடன் ஒத்துப் போயுள்ளது.

மட்டக்களப்பு ஸியோன் தேவாலயத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட மொஹம்மட் நஸார் மொஹம்மட் அஸாத் என்ற தற்கொலைக் குண்டுதாரியின் மரபணு இவரது தாயிடமிருந்து பெறப்பட்ட இரத்த மாதிரி ஒத்துப் போயுள்ளது. தெமட்டகொட, மஹவில வீதியிலுள்ள இப்றாஹிமின் வீட்டில் இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின. இந்த சம்பவத்தில் பெண் ஒருவரும் மூன்று பிள்ளைகளும் உயிரிழந்தனர். இதில் குண்டை வெடிக்கச் செய்தவர் என சந்தேகிக்கப்படும் மொஹம்மட் பாத்திமா ஜிப்ரி என்ற குண்டுதாரி ஷங்கிரிலா ஹோட்டல் குண்டுதாரிகளில் ஒருவரான மொஹம்மட் இப்றாஹிம் இல்ஹாமின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் என்றும் டீ. என். ஏ பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

ஷங்கிரிலா ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட இரண்டு தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான மொஹம்மட் காசிம் மொஹம்மட் ஸஹ்ரானின் மரபணு ஸஹரானின் மனைவி மற்றும் மகளது இரத்த மாதிரியுடன் ஒத்துப் போயுள்ளதை அரச இரசாயனப் பகுப்பாயவுத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.