பட்டதாரிகளை ஒருநிலைப்படுத்தும் பயிற்சி திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக இராணுவ தளபதி மதிப்பீடு
செப்டம்பர் 16, 2020நாடு முழுவதிலும் உள்ள 51 இராணுவ பயிற்சி மையங்களில் திங்கட்கிழமை ஆரம்பமான பட்டதாரிகளை ஒருநிலைப்படுத்தும் பயிற்சித் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராய, இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா பனாகொடை இராணுவ வளாகத்தில் அமைந்துள்ள இராணுவப் பயிற்சி மையத்திற்கு நேற்றைய தினம் (15) விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதற்கமைய, ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் இடம்பெற்றுவரும் பட்டதாரிகளுக்கான ஒருநிலைப்படுத்தும் திட்டத்தின் பயிற்சி அமர்வுகளை இராணுவ தளபதி மதிப்பாய்வு செய்த அதேவேளை, பயிற்சி பெறும் பட்டதாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட தாகவும் இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்டதாரிகளை ஒருநிலைப்படுத்தும் பயிற்சித் திட்டம் ஐந்து கட்டங்களாக இடம்பெறவுள்ளதுடன் ஒவ்வொரு கட்டத்திலும் 10,000 பட்டதாரிகள் உள்ளீர்க்கப்படவுள்ளனர். இதற்கமைய ஐந்து மாதங்களில் 50,000 பட்டதாரிகளுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளது.
பயிற்சிபெறும் பட்டதாரிகளின் அறிவு, திறமை மற்றும் ஆற்றல்களை மேம்படுத்துவதன் மூலம் அவர்களை தேசத்தைக் கட்டியெழுப்பும் மனப்பாங்கைக் கொண்ட பயிற்சி பெற்ற தொழில் திறனாளிகளாக மாற்றியமைப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இந்தத் திட்டம், நாட்டிலுள்ள ஏழு பாதுகாப்புப் படை தலைமையகங்களினால் ஒருங்கிணைக்கப்பட்டு, பாதுகாப்பு அமைச்சினால் உன்னிப்பாக கண்காணிக்கப்படட்டு வருகின்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உள்நாட்டு விவகார அமைச்சு, தெரிவு செய்யப்பட்ட அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றன.
இந்த விஜயத்தில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சூல அபேநாயக்க மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.