ரூ. 21 மில்லியன் பெறுமதியான மஞ்சள் மற்றும் கேரள கஞ்சா கடத்தல் நடவடிக்கை இராணுவத்தினரால் முறியடிப்பு
செப்டம்பர் 24, 2020சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 205 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 104 கிலோகிராம் கேரள கஞ்சா என்பவற்றை இராணுவத்தினர் நேற்று கைப்பற்றினர்.
கடத்தல்காரர்களினால் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 20.8 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா, கொண்டு செல்லப்படும் வேளையில் குஞ்சிக்குளம் வீதித்தடையருகே முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்தனர். குறித்த கஞ்சா பொதிகள் குளிர்சாதன பெட்டி ஒன்றில் சூசகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, கிடைக்கப்பெற்ற புலனாய்வு அறிக்கைக்கு அமைய தேடுதல் பணிகளை முன்னெடுத்த இராணுவத்தினரால் மதவாச்சி - மன்னார் வீதியில் ஏற்படுத்தப்பட்டிருந்த வீதி தடையில் சட்டவிரோதமாக இலகுரக வாகனம் ஒன்றில் கடத்தி செல்லப்பட்டஒரு தொகை உலர் மஞ்சளினை கைப்பற்றினார்.
இராணுவத்தின் 7வது விஜயபாகு காலாட் படைப்பிரிவு மற்றும் 15வது கெமுனு வோச் படைப் பிரிவு ஆகியன இணைந்து மன்னார் பகுதியில் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போதே சட்டவிரோதமான கடத்தல் செயற்பாடுகள் முறியடிக்கப்பட்டது.
மேற்படி சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான பொறுப்பு அந்தந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.