2020 ஒக்டோபர் 5 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற பாதுகாப்புச் செயலாளரின் ஊடக மாநாடு
ஒக்டோபர் 05, 2020ஊடக அறிக்கை
உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சினால் வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் அரசாங்க அதிபர்கள் / மாவட்ட செயலாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று 2020 ஒக்டோபர் 1 ஆம் திகதியன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இராஜாங்க அமைச்சின் செயலாளர் என்ற வகையில் இந்நிகழ்வில் நான் ஆற்றிய உரை சில தரப்பினரால் திரிபுபடுத்தியுள்ளதுடன், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை நான் பாராட்டியதாக சித்தரிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுவருகின்றது.
இது ஒரு அரச நிகழ்வொன்றாகும், வவுனியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்டார்
நான் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலளார் என்றவகையில் கலந்துகொண்டேன். இது ஒரு அரச நிகழ்வு என்பதால் குறித்த பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு அரசியல்வாதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் இந்த நிகழ்விற்கு வருகைதந்திருந்தார். எனது உரையில் நான் அவரது பெயரை மாத்திரமே கூறினேன்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 297,000 பொதுமக்களை கண்ணிவெடிகளை அகற்றி மீள்குடியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அப்போது வவுனியா அரசாங்க அதிபராக கடமையாற்றிய திருமதி. பீஎம்எஸ் சாள்ஸ் குறித்த நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியிருந்தார். அவற்றையே நான் பாராட்டினேன். இன மாத பேதங்களுக்கு அப்பால் பொதுமக்களுக்கான சேவைகளை ஆற்றியுள்ளோம்.
நான் ஆற்றிய உரையின் காணொளிகள் எடிட் செய்யப்பட்டுள்ளதுடன் அவைகள் திரிபுபடுத்தப்பட்ட காணொளியாக மாற்றப்பட்டு ஒளிபரப்பப்பட்டுள்ளன. அது மக்கள் மத்தியில் ஒரு தவறான கருத்தை உருவாக்கியுள்ளது. எனவே, இவ்விடயம் தொடர்பாக தேவைப்படும் பட்சத்தில் சட்ட ஆலோசனைகளை பெற எதிர்பார்க்கிறேன்.
இராணுவ அதிகாரி என்றவகையில் இந்நாட்டுக்காக நேர்மையாகவும் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றிவந்துள்ளேன். இன்றும் அதேநிலைமையிலேயே சேவையாற்றிவருகிறேன். ஏனெனில் அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் ஆகியோர் என்மீதி நம்பிக்கையுடன் பாரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். அதனை மனபூர்வமாகவும் இந்நாட்டுக்ககவும் நாட்டுமக்களுக்காகவும் தொடர்ந்தும் எனது சேவையை முன்னெடுக்க எதிர்பார்க்கிறேன்.