இலங்கை இராணுவத்தின் 71வது ஆண்டு தினம் இன்று
ஒக்டோபர் 10, 2020இலங்கை இராணுவம் 71வது ஆண்டு நிறைவு தினம் இன்றாகும் (ஒக்டோபர்,10) .
இத்தினத்தை முன்னிட்டு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது இராணுவ தின வாழ்த்துச் செய்தியில் நாட்டுக்காக உயிர்நீத்த அனைத்து போர் வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும், கடமையாற்றும் இராணுவ அதிகாரிகள், அனைத்து படைவீரர்கள் மற்றும் சிவில் பணியாளர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ தினத்தை முன்னிட்டு 514 இராணுவ அதிகாரிகள் மற்றும் 14140 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டமைக்காக அதிமேதகு ஜனாதிபதிக்கு தனது விஷேட நன்றியை தெரிவிப்பதுடன், பதவி உயர்வு பெரும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியின் ஆரம்ப கட்டளை தளபதியாக பிரிகேடியர், ஆர் சின்க்ளேர் சேவையற்றியதுடன், தியத்தலாவையில் அதற்கென ஒரு இராணுவ கல்லூரி நிறுவப்பட்டதுடன், சிலோன் இராணுவத்தின் முதலாவது தளபதியாக பிரிகேடியர் அன்டன் முத்துகுமரு தனது கடமைகளை பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.
ஆயுதப்போராட்டம், ஆயுத ஒத்துழைப்பு போன்ற சேவைகளை வழங்கும் வகையில் இலங்கை இராணுவம் நாடு முழுவதும் 24 படைப்பிரயுகளை நிறுவியதன் ஊடாக தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், பேரழிவுகள், அனர்த்தங்கள் மற்றும் அவசர நேரங்களில் தனது அளப்பரிய சேவைகளை விரைவாக வழங்கிவருகின்றனர்.
மேலும், அனைத்து சமூகங்களினதும் மனதையும் உள்ளத்தையும் வென்றெடுக்கும் வகையில் சேவையாற்றிவரும் இலங்கை இராணுவம் அதன் பன்முக நிபுணத்துவத்துடன் தேசத்தை கட்டியெழுப்பும் பணிகள், வனவளத்தை பாதுகாத்தல், மனிதாபிமான செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் நிர்மாணப்பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதோடு மாத்திரமன்றி, அவற்றுக்கும் மேலாக தமது உயிரை துச்சமாக மதித்து பொதுமக்கள் நட்புறவின் ஊடாக நாட்டை பாதுகாக்கும் காவலர்களாக சேவையாற்றிவருகின்றனர்.
இலங்கை இராணுவம் 23 கட்டளைத் தளபதிகளாலும் இன்றுவரை திறம்பட கட்டளையிடப்பட்டு இன்று பாதுகாப்பு பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.
கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவல் நாட்டில் தீவிரமடைந்துள்ள இந்நிலையில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் சுகாதார அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து இராணுவத்தினர் ஆற்றிய அளப்பரிய சேவை வெற்றிபெற்றுள்ளதை நிறுபித்துள்ளனர்.
இதேவேளை நாட்டில் கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கை இராணுவத்தின் (ஒக்டோபர்,10) 71வது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள் பிட்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.