பலத்த மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
ஒக்டோபர் 13, 2020நாட்டின் சில பாகங்களில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் மேல் சப்ரகமுவ மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ செய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு வடமத்திய வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு அந்தமான் கடற்பரப்புகளிலும் அண்மையாக உள்ள கிழக்கு மத்திய வங்காள விரிகுடா கடல் பரப்புகளிலும் விருத்தியடைந்து உள்ள தாழமுக்கம் காரணமாக அடுத்த சில நாட்களில் பலத்த அல்லது மிகக் கடுமையான காற்று, பலத்த மழை வீழ்ச்சிகொந்தளிப்பான கடல் நிலைமைகள் எதிர்பார்க்கப்படுவதனால் காலியில் இருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புக்களில் எதிர்வரும் 14ம் திகதிவரை மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.