அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் சுனாமி ஒத்திகை நிகழ்வு

ஒக்டோபர் 13, 2020

28 நாடுகளின் தொழில்நுட்ப பங்களிப்புடன் அனர்த்த முகாமைத்துவ மத்திய  நிலையத்தினால்  இன்றைய தினம்  (ஒக்டோபர். 13) பிராந்திய சுனாமி  அனர்த்த ஒத்திகை நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பேரழிவு அபாயத்தைக் குறைப்பதற்கான உலகளாவிய கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக சர்வதேச அனர்த்த குறைப்பு தினத்துடன் இணைந்து இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  தெரிவித்துள்ளது.

இந்த சுனாமி ஒத்திகை நிகழ்வுக்கான தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் வழிகாட்டுதல்களை  ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் பண்பாட்டு  அமையம்  (யுனெஸ்கோ), அரசாங்கங்களுக்கிடையிலான ஓசியானோ கிராஃபிக் ஆணைக்குழு மற்றும் இந்து சமுத்திர  சுனாமி எச்சரிக்கை அமைப்பு ஆகியன இணைந்து வழங்கியிருந்தது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இந்த ஒத்திகை நிகழ்வு  மட்டக்களப்பு, திருகோணமலை, களுத்துறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை  மையமாகக் கொண்டு வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னிலைப்பட்ட நிகழ்வாக இடம்பெற்றது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இந்த ஒத்திகை நிகழ்வின்  நோக்கம்  தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில்  ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகளின் செயல்திறனை சோதித்தல், எதிர்காலத்தில் பின்பற்றவேண்டிய உத்திகளைக் கண்டறிவதற்கான பயிற்சி மற்றும் ஏற்கனவே உள்ள குறைபாடுகளைத் தவிர்த்தல்,  இயக்க நடைமுறைகளைச் சோதித்தல் எனபனவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.