அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தினால் கடற்படைக்கு 04 பிசிஆர் இயந்திரங்கள்
ஒக்டோபர் 18, 2020நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியை வலுப்படுத்தும் வகையில், அவுஸ்திரேலிய பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு 04 பிசிஆர் பரிசோதனை இயந்திரங்களை வழங்கியுள்ளது.
கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் அண்மையில் இடம்பெற்ற வைபவத்தின் போது இந்த பிசிஆர் பரிசோதனை இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், அவுஸ்திரேலிய பாதுகாப்புத் திணைக்களத்திடம் இருந்து 02 இயந்திரங்களையும், உள்நாட்டு அலுவல்கள் திணைக்களத்திடம் இருந்து 02 இயந்திரங்களையும் இலங்கை கடற்படை பெற்றுக்கொண்டது.
ஒவ்வொரு இயந்திரமும் ஒரே நேரத்தில் நான்கு மாதிரிகளைச் சோதிக்கும் திறனைக் கொண்டுள்ளது, மேலும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த உதவியின் பயனாக இலங்கை கடற்படையினால் திறமையான மற்றும் வினைத்திறன் மிகுந்த பிசிஆர் சோதனையை மேற்கொள்ள உதவும்.
குறித்த பிசிஆர் பரிசோதனை இயந்திரங்களை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் உத்தியோக பூர்வமாக இலங்கை கடற்படையிடம் கையளித்தார்.
இந்த நிகழ்வில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹோலி, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, உயர் ஸ்தானிகராலயத்தின் உள் உள்நாட்டலுவல்களுக்கான ஆலோசகர் திரு. ஹசன் சோவைட் மற்றும் கடற்படையின் சுகாதார சேவைகள் (நோய் கண்டறிதல் மற்றும் தடுப்பு) பணிப்பாளர் அறுவை சிகிச்சை நிபுணர் கொமடோர் பிஜேபி மாரம்பே ஆகியோர் கலந்து கொண்டார்.