மினுவாங்கொடை கொரோனா வைரஸ் கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2077 ஆக அதிகரிப்பு

ஒக்டோபர் 19, 2020

மினுவாங்கொடை கொரோனா வைரஸ் கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2077 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,041 ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களும் அவர்களுடன் நேரடி தொடர்பைப் பேணிய 1036 பேரும் அடங்குவதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் ​தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 63 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் ஜப்பானில் இருந்து வருகை தந்த இலங்கையர்கள் எனவும் ஏனைய 61 பேரும் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜப்பான், நாரிட்டா நகரில் இருந்து UL455 எனும் விமானம் மூலம் 10 பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அவர்கள் பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட  பின்னர்  முப்படையினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.