100,000 வேலைவாய்ப்புக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பம்
ஒக்டோபர் 20, 2020ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்கள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக குறைந்த வருமானங்ககளைப் பெரும் குடும்பங்களிலிருந்து 34,818 பேர் பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியமனங்களைப் பெறும் பயிற்சியாளர்கள் தமது திறன்கள் மற்றும் விருப்பங்களுக்கு அமைய 25 இனங்காணப்பட்ட பிரதேசங்களில் தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை (NAITA)யின் மேர்வார்வையின் கீழ் 06 மாத முறையான பயிற்சியைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
பயிற்சியாளர்களுக்கு மாதாந்த உதவித் தொகையாக ரூ. 22,500 வழங்கப்படவுள்ளதுடன் பயிற்சியின் நிறைவில் மூன்றாம் தர தேசிய தொழிற் சான்றிதழும் (NVQ III) வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை திட்டத்திற்கு அமைய "வறுமையற்ற இலங்கையை உருவாக்குதல்" என்ற கருத்திட்டத்தின் கீழ் 100,000 வேலைத் திட்டம் உருவாக்கப்பட்டது.
தெரிவு செய்யப்பட்டுள்ள பயிற்சியாளர்களுக்கு பயிற்சியின் பின்னர் பிஎல்-01 சேவை திட்டத்திற்கு அமைய நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. இவர்கள் அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசோடு இணைந்த நிறுவனங்கள் ஆகியவற்றில் காணப்படும் தொழில்வாய்ப்பு வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.