ஜனாதிபதி – சீன பிரதமர் சந்திப்பு

மே 16, 2019

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மற்றும் சீன பிரதமர் Li Keqiang ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (15) பிற்பகல் பீஜிங் நகரில் இடம்பெற்றது.

இலங்கையில் இடம்பெற்ற எதிர்பாராத பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தனது அனுதாபங்களை தெரிவித்த சீன பிரதமர், இலங்கை சீன ஜனாதிபதிகளுக்கிடையிலான கலந்துரையாடலின்போது இணக்கம் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக தாம் அதிக கவனம் செலுத்தியுள்ளதோடு, பயங்கரவாத சவால்களை வெற்றிகொள்வதற்கு சீன அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் பெற்றுக்கொடுக்க ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இரு நாட்டு ஜனாதிபதிகளும் கலந்துரையாடியதற்கமைய, பயங்கரவாத செயற்பாடுகளுக்கு இணைய வசதியை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கும் இலங்கை பாதுகாப்புத் துறையினர் சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான உபாய மார்க்க ஆற்றல்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கும் நன்கொடை வழங்க துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படுமென சீன பிரதமர் குறிப்பிட்டார்.

இலங்கையில் ஏற்பட்ட அவசர நிலைமை காரணமாக பாதுகாப்புத் துறையினரின் செயற்பாடுகளுக்காக 260 கோடி ரூபாய் நிதி அன்பளிப்பினை வழங்குதல், பொலிஸ் திணைக்களத்திற்கு தேவையான வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட இணக்கம் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் சீன அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அனைத்து நட்பு நாடுகளின் ஒத்துழைப்புடனும் இலங்கையை சுதந்திரமான, சுபீட்சமான தேசமாக கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.

இருநாடுகளுக்குமிடையிலான பல பொருளாதார அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதோடு, இலங்கையில் மிக உயர்ந்த தரத்துடனும் நியமங்களுடனும் தயாரிக்கப்படும் உற்பத்திகளுக்கு சீனாவில் அதிக கேள்வி காணப்படுவதாகவும் அதற்கான சிறந்த சந்தைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஆற்றல் காணப்படுவதாகவும் சீன பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

நன்றி: pmdnews.lk