இலங்கை-இந்திய கடற்படையினரின் கடல்சார் இயங்கு தன்மையை வலுப்படுத்தும் 'ஸ்லினெக்ஸ் - 2020' கூட்டுப் பயிற்சி
ஒக்டோபர் 22, 2020இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்குமிடையிலான 'ஸ்லினெக்ஸ்' இருதரப்பு கடற்படை கூட்டுப் பயிற்சி நேற்றைய தினம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.
குறித்த இந்த கூட்டுப் பயிற்சி இம்மாதம் 19ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை இலங்கையின் கிழக்குக் கரையோரப் பகுதியில் இடம்பெற்றது.
இந்த கடற்படை கூட்டுப் பயிற்சியில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான கஜபாகு மற்றும் சயுர ஆகிய கடற்படைக் கப்பல்களும் இந்திய கடற்படைக்கு சொந்தமான கமோடா மற்றும் கில்டான் ஆகிய கடற்படைக் கப்பல்களும் பங்குபற்றின.
ஸ்லினெக்ஸ் - 2020 கூட்டு பயிற்சியானது, எதிர்கால கூட்டு கடற்படை நடவடிக்கைகளுக்கு சிறந்த நடைமுறைகள் பரிமாறிக்கொண்டிருக்கும் சிறந்த தளங்களில் ஒன்றாகும்.
இந்த கடற்படை பயிற்சியானது அயல் நாடுகள் என்ற வகையில் இருநாட்டு கடற்படையினருக்கும் ஒருமைப்பாடு மற்றும் பரஸ்பர புரிதல் என்பவற்றை வலுப்படுத்தும் வகையில் இடம்பெறுகின்றது.
இந்தக் கூட்டு கடற்படை பயிற்சியானது கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் துப்பாக்கிப் பயிற்சி, கடற்படை வீரர்களுக்கிடையிலான புரிந்துணர்வு செயற்பாடுகள், கப்பல் வழிநடத்தல் அமைப்பு, விமான எதிர்ப்பு பயிற்சிகள், கடலில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் என்பன தொடர்பான பயிற்சிகளை உள்ளடக்கி இருந்தது.
இந்தப் பயிற்சி தொடரின் 8வது ஸ்லினெக்ஸ் கடற்படை கூட்டு பயிற்சியானது இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.