கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,561 அதிகரிப்பு

ஒக்டோபர் 23, 2020

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 60 பேர் கொரோனா வைரஸ் தொற்று குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி சென்றதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3, 561 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்கள் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய தொற்றுநோயியல் வைத்தியசாலையில் (IDH) இருந்து 32 பேரும், வெலிகந்த வைத்தியசாலையில் இருந்து 13 பேரும், ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் இருந்து 02 பேரும், தெல்தெனிய வைத்தியசாலையில் 04 பேரும், ரம்புக்கனை  வைத்தியசாலையில் இருந்து  09 பேரும் கொரோனா வைரஸ் தொற்று குணமடைந்து வெளியேறி உள்ளதாக தொற்றுநோய்கள் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதுவரை நாட்டில் 6,287 பேர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அடையாளங் காணப்பட்டுள்ள அதேவேளை, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆகும்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 2,712 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.