சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் வகையில் திடமான நடவடிக்கை முன்னெடுப்பு

மே 16, 2019

இலங்கை கடற்படை நாட்டின் தற்போதைய நிலையில் வன்முறைகள் மற்றும் அசம்பாவிதங்களை ஏற்படுத்தாமல் மிகவும் அமைதியுடன் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் வகையில் நாடுமுழுவதும் சுமார் 2000 கடற்படை வீரர்களை ஈடுபடுத்தியுள்ளது. சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவோ எவரேனும் ஒருவரையோ அல்லது குழுவினரையோ தூண்டும் வகையிலோ, வன்முறைகளை ஏற்படுத்தும் வகையிலோ, செயட்படவேண்டாம் எனவும், அவ்வாறு செயட்படுவர்களுக்கு எதிராக முப்படையினரும் பொலிஸாரும் பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தை நிலைநாட்டவும் தயார் நிலையில் உள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று முன்தினம் (15) நடைபெற்ற போது கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் தெரிவித்தார்.

இங்கு விஷேட அறிவிப்பை விடுத்த கடற்படை தளபதி மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் தற்போதைய நிலையில் வன்முறைகள் மற்றும் அசம்பாவிதங்களை ஏற்படுத்தாமல் மிகவும் அமைதியுடன் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட முப்படையினர் திட்டமிட்ட அடிப்படையில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு பொது மக்கள் தங்களது ஒத்துழைப்பை வழங்குங்கள். முப்படை மற்றும் பொலிஸார் தொடர்பில் நீங்கள் நம்பிக்கை வையுங்கள். வீணான அச்சம் கொள்ளத் தேவையில்லை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய காலம் இது என அவர் தெரிவித்தார்.

நாட்டின் தரைவழி பாதுகாப்பிற்கு பூரண பங்களிப்புக்களை வழங்கிவரும் கடற்படையினர் கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. எமது கடல் வழி பாதுகாப்பு உறுதிப் படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக கடந்த 11ஆம் திகதி சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முற்பட்ட 74 கிலோ கேரளா கஞ்சாவையும் நேற்று காலை கொண்டுவர முற்பட்ட 75 கிலோ கேரளா கஞ்சாவையும் நாட்டிற்குள் கொண்டுவராமல் கைப்பற்ற முடிந்தது என்றும், அனைவரும் ஒன்றிணைவதன் மூலமே நாட்டையும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப முடியும். எனவே நாட்டை முன்னேற்ற ஒன்றுபடுவோம் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்