வடமேற்கு மாகாணத்தில் வன்முறையுடன் தொடர்புடைய 78 நபர்கள் கைது
மே 16, 2019கடந்த இரண்டு நாட்களில் வடமேற்கு மாகாணத்தில் குறிப்பாக குருனாகல், நிகவெரட்டிய, மினுவங்கொட, வாரியபொல, குலியாபிடிட்டிய மற்றும் சிலாபம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் வன்முறையுடன் தொடர்புடைய 78 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இவர்கள் அனைவரும் நீதவான் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வன்முறையுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபார்கள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் அதிகாரிகள் காணொளி பதிவுகளின் உதவியுடன் இவ்வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக அறிந்துகொள்ளும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர அவர்கள் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் அனேகமானவர்கள் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழில்புரியும் ஊழியர்கள் என்று தெரிவித்த அவர் இவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு தொழில் புரியும் நிறுவனங்களுக்கு தெரியப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
வன்முறையினை கட்டுப்படுத்தவும் அமைதியை நிலை நாட்டடும் பொருட்டு வடமேல் மாகாணத்தில் மாத்திரம் 5500 பொலிஸார் மேலதிக கடைமையில் ஈடுபடுத்த நேர்ந்ததாக தெரிவித்த அவர் இதனால் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த நடவடிக்கைகளும் மக்களுக்காக அன்றாடம் முன்னெடுக்க இருந்த பொலிஸ் நிலைய, நீதிமன்ற, குற்ற செயல்கள் தொடர்பான விசாரணைகள், வீதி போக்குவரத்து ஒழுங்கு செயற்பாடுகளில் ஈடுபட முடியாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இதற்கு மேலதிகமாக முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரும் அழைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களில் பெண்கள் உட்பட 65 பேர் குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸாரினாலும், இரண்டு பெண்கள் உட்பட 20 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினாலும் தடுத்து வைக்கப்பட்டு தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய தாக்குதலுக்கு உதவிய சந்தேக நபரை கைது செய்ய மக்களின் உதவியை நாடியிருந்த அதேவேளை, இவர் தொடர்பாக இரகசிய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி புதிய காத்தன்குடியை சேர்ந்த மொஹமெட் ஆதம் லெப்பே என்பவரை கைது செய்துள்ளனர்.
பின்வரும் இடங்களில் உள்ள 17 பாதுகாப்பான வீடுகள் பயங்கரவாத குழுக்களால் பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கட்டுவாபிட்டிய – நீர்கொழும்பு, சரிக்கமுல்லை – பாணந்துறை, புனித அந்தோனியார் வீதி – கொழும்பு-3, டேம்ப்லஸ் வீதி – கல்கிஸ்சை, வானாத்தவில்லு- புத்தளம், ஹென்டரமுள்ள- வத்தளை, மயூரா பிளேஸ்- கொழும்பு-6, சாய்ந்தமருது -9 – அம்பாறை, மல்வானை, திஹாரிய- கலஹெடிஹென, கொச்சிக்கடை – தலுவகொடுவ, வாளைச்சேனை – ரிதியதென்ன, சுபாரதிபுற – குளியாபிட்டிய, ஹெட்டிபோல – குருனாகலை, கடுபெத்த, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகியி பகுதிகளாகும். மேலும் அவர்களின் வானாத்தவில்லு, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, கண்டி அருப்பொல, மல்வானை, காத்தான்குடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரேதேசங்களில் தமது பயிற்சி முகாம்களா பயன்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் வைத்திருக்கும் வெடிபொருட்கள் தொடர்பிலான கால அவகாசம் மேலும் 20ஆம் திகதி காலை 06.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்குப்பின்னர் சட்டவிரோதமாக வெடிபொருட்களை தேடி கைதுசெய்யும் பொருட்டு நாடுமுழுவதிலும் பாரிய சுற்றி வலைப்பூ தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரித்தார். எனவே அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக வெடி பொருட்களை வைத்திருப்பவர்கள் அது தொடர்பான தகவல்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது தத்தம் பிரதேசத்தில் இயங்கும் பொலிஸ் பொதுமக்கள் பிரிவுக்கோ அறியத்தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறனர்.