மிஹிந்து மகா தூபி, மிஹிந்து குகை மற்றும் நினைவுச்சின்ன மாளிகை புனரமைப்பு

ஒக்டோபர் 25, 2020

மிஹிந்து மகா தூபி, மிஹிந்து குகை மற்றும் நினைவுச்சின்ன மாளிகை என்பவற்றின் புனரமைப்பு பணிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டுதலுக்கு அமைய மகாமேவனவ பொளத்த மடாலயத்தின் தலைவர் வண. கிரிபத்கொட ஞானநந்தா தோரின் பங்களிப்புடன் நேற்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அரஹந்த் மஹிந்த தேரர் இயற்கையெய்திய 2280வது மிஹிந்து புர அடவக்க போய தினமான ஒக்டோபர் 23ம் திகதி தேரரின் சிரார்த்த தினத்தை முன்னிட்டு புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படன.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சேல சைத்ய வளாகத்தில் உள்ள அரஹந்த் மஹிந்த தேரரின் உருவச் சிலையை வைபவ ரீதியாக திரைநீக்கம்  செய்து வைத்தார்.

நாட்டின் பழமையான தூபிகளில் ஒன்றாக விளங்கும் இந்த தூபியானது, கி.மு. 200-210ம்  ஆண்டு காலப்பகுதியில் இலங்கையை ஆட்சி செய்த தேவநம்பியதிஸ்ஸ மன்னனின் தம்பியான உபதிஸ்ஸ மன்னனினால் அரஹந்த் மஹிந்த தேரரின் அஸ்தியின் ஒரு பகுதியை பொக்கிஷமாகக் கொண்டு கட்டப்பட்டதாக மகாவம்சம் கூறுகிறது.

நீண்ட வரலாற்று முக்கியத்துவத்தை கொண்ட தற்போது சேதமடைந்துள்ள இத் தூபியின் பழங்கால மரபுரிமையை பேணத்தக்க வகையில் அதன் புனரமைப்பு பணிகைளை எதிர்வரும் பொசன் போய தினத்துக்கு முன்பாக பூரணப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புனரமைப்பு திட்டத்தின் கீழ், அரஹந்த் மஹிந்த தேரர்  தியானமிருந்தாக நம்பப்படும் மிஹிந்து குகைக்கு செல்லும் கல் படிகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

இந்த புனரமைப்பு பணிகள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவின்  பணிப்புரைக்கமைய இலங்கை இராணுவ மற்றும் கடற்படையின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வில் தாய்வான் பிரதம விகாராதிபதி வண. கலாநிதி. பொடகம சந்திம தேரர் உள்ளிட்ட  மகா சங்கத்தினர், அமைச்சர்களான எஸ்எம் சந்திரசேன, துமிந்த திஸாநாயக்க, ஷெஹான் சேமசிங்க, பேராசியர் சன்ன ஜயசுமன, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.