உலக உணவுத்திட்ட பிரதிநிதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஒக்டோபர் 27, 2020

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதி திருமதி. பிரெண்டா பார்டொன் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று சந்தித்தார்.

நாட்டின் மூலோபாய திட்டம் 2018-2020 ஊடாக உலக உணவுத் திட்ட உதவியின் மூலம்  அதற்கான ஒத்துழைப்பை தொடர தேசிய முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகள் என்பன தொடர்பாக கலந்துரையாடும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

அதற்கேற்ப  தற்போதைய நாட்டின் மூலோபாயத் திட்டத்தின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உலக உணவுத் திட்ட நடவடிக்கை தொடர்பில் பாதுகாப்பு செயலாளருக்கு சுருக்கமாக விளக்கமளிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, ஐநாவின் உலக உணவு த் திட்ட கொள்கை திட்ட அதிகாரி திரு. அபேரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக  கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை திருமதி. பார்டன் பாராட்டினார்.

மேலும், தற்போதைய கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக முன்னெடுகப்படும் நடவடிக்கைகள் மற்றும் தற்போது நாட்டில் நிலவும்  நிலைமைகளின் போது உலக உணவுத் திட்டத்தினால்  இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய ஒத்துழைப்பு தொடர்பாகவும்  கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

நாட்டில் குறிப்பாக தொற்று நோய் பரவல்  போன்ற அனர்த்தங்கள்  ஏற்படுகின்ற வேளையில் உலக உணவுத் திட்ட நிறுவனம் இணை நிறுவனங்களுடன் இணைந்து அவற்றுக்கு நிலையான தீர்வு காணும் வகையில்  செயற்பட வேண்டிய விதம் குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

அனர்த்தங்களின் போதான அவசர நிலைமைகளின் போது கடந்த காலங்களில் உலக உணவுத்திட்ட நிறுவனத்தினால் அளிக்கப்பட்ட உதவிகள் குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் இதன்போது குறிப்பிட்டார்.

முப்படை மற்றும் ஏனைய சட்ட அமுலாக்க பிரிவினரால் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் சிறப்பான நடவடிக்கைகள் குறித்து உலக உணவுத்திட்ட  நிறுவனத்தினால் வதிவிடப் பிரதிநிதி இதன் போது குறிப்பிட்டார்.

தொற்று நோய் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைள் குறித்து கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல் குணரத்ன, ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு உயர்வான சேவையை வழங்க இராணுவ - சிவில் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் சிறப்பாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.

வலுவான ஒத்துழைப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில்  சமாதானத்திற்கான நோபல் பரிசை வெற்றிகொண்ட உலக உணவுத்திட்ட நிறுவத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

வடகீழ்  பருவப் பெயர்ச்சி மழை துவங்குவதற்கு முன்னர் மாவட்ட மட்டத்தில் அனர்த்த முகாமைத்துவம் செய்வதற்காக  உணவு அல்லாத  உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ்  தகவல் தொழிநுட்ப  உபகரணங்களை உலக உணவுத் திட்ட நிறுவனம்  இதன் போது  வழங்கியமை குறிப்பிடத்தக்கது.