ஜனாதிபதியின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

ஒக்டோபர் 30, 2020

இலங்கை வாழ் முஸ்லிம்கள் உலகெங்கிலும் பரந்து வாழும் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து சகோதரத்துவத்துடன் முஹம்மத் நபியவர்களின் மீலாத் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

முஹம்மத் நபியவர்கள் மனித குலத்திற்காக செய்த அர்ப்பணிப்புகளை முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்வது சிறந்ததோர் அபிவிருத்தியடைந்த சமூகத்திற்கான அத்திவாரமாக அமையும் என்பது எனது நம்பிக்கையாகும். அடுத்த மனிதர்களுடனான எமது உறவு நபிகளார் போதித்த ஒழுக்கப் பெறுமானங்களை மதித்து குரோதங்கள் மற்றும் சந்தேகங்களை ஒழிக்கும் வகையிலேயே அமைய வேண்டும்.

முன்னெப்போதுமில்லாத வகையில் பல்வேறு பிரச்சனைகளை தோற்றுவித்து உலகெங்கிலும் பரவிவரும் கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு மத்தியில் முழு மனித சமூகமும் பாரிய சவாலுக்கு முகம்கொடுத்துள்ளது. இத்தகையதொரு கால சூழ்நிலையில் ஆன்மீக நம்பிக்கைகளுக்கு முதலிடமளித்து வாழ்வது எமக்கு உள அமைதியை பெற்றுத்தரும். அதேபோன்று பரஸ்பர நலன்பேணல், சமூகங்களுக்கு மத்தியில் நல்லிணக்கம் மற்றும் பொது நலனை அடைந்துகொள்வதற்காக நபிகளாரின் வாழ்வியலில் இருந்து பெற்றுக்கொண்ட நன்நெறிகளை நாம் சமூகமயப்படுத்த வேண்டியுள்ளது.

நபிகளாரின் பிறந்த நாளை கொண்டாடும் இச்சந்தரப்பத்தில் அவர்கள் காட்டித் தந்த பெறுமானங்களுக்கு ஏற்ப வாழ்ந்து அனைத்து வகையான தீவிரவாதங்களையும் தோற்கடித்து சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான திடவுறுதியுடன் இஸ்லாமியர்கள் ஒன்றுபடுவார்கள் என நான் நம்புகின்றேன்.

இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியான மீலாதுந் நபி தினத்திற்கு எனது பிரார்த்தனைகள்.

 

கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கை ஜனாதிபதி

 

 

நன்றி  - http://www.pmdnews.lk