மினுவாங்கொடை கொத்தணியில் தொற்றுக்குள்ளான 67 பேர் குணம் அடைவு

ஒக்டோபர் 30, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 586 பேர் நேற்றைய தினம் புதிதாக அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 9,791 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு  தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்டிருந்த 59,314 பேர் தங்கழுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 67 பேர் பூரண குணம் அடைந்துள்ளனர்.

மேலும், மினுவாங்கொடை  கொத்தணியில் வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,313 ஆக அதிகரித்துள்ள அதே வேளை, அவர்களில் 1,041 பேர் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் என கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, படையினரால் நிர்வகிக்கப்படும் 64  தனிமைப்படுத்தல் மையங்களில் மொத்தமாக 6,463 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் இதுவரை 490,563 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 11, 773 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.