தர இறக்கம் செய்யப்பட்ட கடற்படையின் இரண்டு கப்பல்களும் கடலுக்கடியில் மூழ்கடிப்பு
ஒக்டோபர் 31, 2020தர இறக்கம் செய்யப்பட்ட இலங்கை கடற்படைக்கு சொந்தமான 'வீரயா' மற்றும் 'ஜகத்தா' ஆகிய இரு கப்பல்கள் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மீனினங்கள் இனப்பெருக்கம் செய்யும் தளமாக பயன்படுத்த வகையில் திருகோணமலை கடலுக்கு அடியில் மூழ்கடிப்புச் செய்யப்பட்டது.
இலங்கை கடற்படைக்கு சொந்தமான தர இறக்கம் செய்யப்பட்ட இரு கப்பல்களும் எதிர்காலத்தில் சுழியோடிகளை ஈர்க்கும் வகையில் தாமாகவே மாற்றமடையத்தக்க வகையில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் ஆழ்கடலில் மூழ்கடிப்புச் செய்யப்பட்டது.
இவ்வாறு கடலில் மூழ்கிய அல்லது மூழ்கடிக்கப்பட்ட கப்பல்கள் மீனினங்களின் பிரதான இனப்பெருக்கத் தளங்களாகவும் அவற்றில் காணப்படும் உலோகத் திட்டுக்கள் கடல் வாழ் உயிரினங்களை ஈர்க்கும் ஒரு காரணி எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு மூழ்கிய கப்பல்களை பெரும்பாலான மீன் இனங்களின் வாழ்விடங்களாக அமைத்துக் கொள்கின்றன.
குறித்த கப்பல்களில் காணப்பட்ட மீள பயன்படுத்தக்கூடிய பாகங்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாகவும் மற்றும் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய எந்த ஒரு நச்சுத்தன்மையான உபகரணங்கள் அவற்றில் இல்லை எனவும் கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையில் சாண்டி குடாவில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது நீருக்கடி அருங்காட்சியகத்தின் வடகிழக்காக சுமார் 25 மீட்டர் தூரத்தில் குறித்த இரு கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டு உள்ளன. இதனால் ஏற்கனவே நீருக்கடியில் அருங்காட்சியகத்தில் உருவாக்கப்பட்ட மீன் இனப்பெருக்கத்திற்கான சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சாண்டி குடாவின் கடற்கரையில் இருந்து இடம்பெற்றுள்ள இந்த புதிய கடல் சுற்றுச்சூழல், எதிர்காலத்தில் அதிக பொருளாதார நலன்களை கவர்ந்திழுக்க ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும் என கடற்படை தெரிவித்துள்ளது.