சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான தகவல்களை பரப்புவதை தடுப்பதற்கு விஷேட பிரிவு

மே 14, 2019

நேற்று மாலை (மே, 12) குளியாப்பிட்டிவில் இடம்பெற்ற சில அசம்பாவிதங்கள் காரணமாக பல கடைகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவினால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும் இன்றும் (மே, 13) அப்பகுதியில் சில அசம்பாவிதங்கள் இடம்பெற்றதை அடுத்து வடமேல் மாகாணம் முழுதும் மறு அறிவித்தல் வரும் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இவ் அசம்பாவிதங்களால் சொத்துக்கள் பல சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் கொள்ளுப்பிட்டி பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இராணுவ பேச்சாளரும் ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்களும் கலந்துகொண்டார்.

சமூகங்களுக்ககிடையில் உள்ளூர் பகுதிகளில் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்களினால் பாதுகாப்பு படையினரை அப்பகுதிகளில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஈடுபடுத்த நேரிடுவதுடன், அவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கு தடையாக அமையும் எனவும் தெரிவித்தார். சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான தகவல்களை பரப்புவதன் காரணமாக சமூகங்களுக்ககிடையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. சிலாபத்தில் இடம்பெற்ற சம்பவம் இதற்கு சிறந்த உதாரணமாகும். இவ்வாறான போலி தகவல்கள் பரப்புவதை தவிர்ப்பதற்காக பொலிஸ் தலைமையகத்தினால் விஷேட பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்பிரிவானது சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான தகவல்கள் பரவுவதை தடுப்பதற்காக முழு முயற்சியுடன் செயற்படுவார்கள். சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறு போலியான தகவல்களை பரப்பும் நபர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவசரகால சட்டத்தின் கீழ் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் சிவில் மற்றும் அரசியல் சர்வதேச ஒப்பந்தத்தின் மூலம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும் எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, உரிய அனுமதிப்பத்திரம் இல்லாத அனைத்துவிதமான வெடிபொருட்களையும் ஒப்படைக்கும் கால அவகாசம் நாளை (மே,14) காலை ஆறு மணியுடன் நிறைவடைகிறது. அத்துடன், 22ஆம் திகதி விஷேட அதிரடிப்படையினரால் வெடிக்க வைக்கப்பட்ட அதே வேன் கொச்சிக்கடை தேவாலய தற்கொலை தாரியின் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த வேன் கிங்ஸ்பரி ஹோட்டலில் தாக்குதல் மேற்கொண்டவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை, குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் இந்த நடவடிக்கையில் மற்றுமொரு சந்தேகநபர் ஈடுபட்டிருப்பதாக தெரியவருவதாகவும், பென்சிலால் வரையப்பட்ட அவரின் வரைபடம் ஊடகங்களூடாக தெரியப்படுத்தப்படுவதுடன், இச்சந்தேக நபர் தொடர்பாக பொதுமக்களின் உதவியை நாடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.