பல பொலிஸ் பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்
நவம்பர் 03, 2020கேகாலை மாவட்டத்தில் ஹெம்மாதகம, மாவனல்லை, புலத்கொஹுபிட்டிய ஆகிய பொலிஸ் பிரதேசங்களும் கலிகமுவ பிரதேச சபை பிரதேசமும் குருணாகல் மாவட்டத்தில் கிரிஉல்ல பொலிஸ் பிரதேசமும் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 275 பேர் நேற்றைய தினம் புதிதாக அடையாளம் காணப் பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 11,335 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய மினுவாங்கொடை கொத்தணியில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7,857 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கட்டார் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளிலிருந்து சுமார் 29 இலங்கை பிரஜைகள் நாடுதிரும்பியுள்ளனர். இவர்கள் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் வருகை தந்து அனைவரும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 15 பேர் இன்றைய தினம் வீடு திரும்ப உள்ளனர்.
இதற்கமைவாக நாட்டில் இதுவரை தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த 62,917 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் முப்படையினர் நிர்வகிக்கப்படும் 45 தனிமைப்படுத்தல் மையங்களில் 1,082 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.