ஐந்து கொரோனா மரணங்கள் நேற்று பதிவாகியது

நவம்பர் 06, 2020

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் ஐந்து பேர் நேற்றைய தினம் உயிரிழந்ததை அடுத்து நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மரணமான ஐவரில் நால்வர் கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.

உயிரிழந்த மூன்று பெண்களுக்கும்  மற்றும் இரண்டு ஆண்களுக்கும் நடத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனையின் போது அவர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

இதற்கமைய, பின்புற தள வைத்தியசாலையில் உயிரிழந்த  கொழும்பு 02ஐச் சேர்ந்த 46 வயதுடையவர் ஒரு சிறுநீரக நோயாளியாவார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் மார்பு வலி காரணமாக உயிரிழந்தார்.

ஏனைய மூவரும் தங்களது வீடுகளில் உயிரிழந்துள்ளனர். இதில் கொழும்பு 12 சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவரும், கொழும்பு 14 சேர்ந்த 73 வயதுடைய பெண்ணொருவரும், கொழும்பு 15 சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவரும் அடங்குகின்றனர்.