அரச ஆதரவுடன் மஞ்சள் பயிர்ச்செய்கை திட்டம் இராணுவத்தினரால் ஆரம்பிப்பு

நவம்பர் 07, 2020

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள உலர்ந்த மஞ்சளுக்கான அதிகரித்த கேள்வியினை ஈடுசெய்யும் வகையில் இராணுவத்தின் விவசாயம் மற்றும் கால்நடை திணைக்களத்தினால் அம்பலாங்கொடையில் அமைந்துள்ள இராணுவத்தினரின் பயிர்ச்செய்கை காணியில் மஞ்சள் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயிர்ச்செய்கை திட்டம் ஜனாதிபதியின் 'சுபீட்சத்தின் நோக்கு' வேலைத் திட்டத்திற்கு அமைவாகவும் இராணுவ தளபதியின் 'துரு மிதுரு நவரட்டக்' திட்டத்திற்கு அமைவாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆசிய உணவு வகை தயாரிப்பில் மருத்துவ குணம் கொண்ட மஞ்சள் தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகின்றது.  இலங்கையில் வருடாந்தம் 50,000 மெற்றிக் தொன் மஞ்சள் இறக்குமதி செய்யப்படுவதுடன் அதற்காக பெருமளவிலான அந்நிய செலாவணி செலவிடப்படுகின்றது.

ஏற்றுமதி இராஜாங்க அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தில் சுமார் 100,000 மஞ்சள் கன்றுகள் அம்பலாங்கொடையில் உள்ள இராணுவப் பயிர்ச்செய்கை காணிகளில் பயிரிடப்படவுள்ளது. இந்த மஞ்சள் கன்றுகள் சுமார் 4 மில்லியன்  மதிப்புடையவையாகும் என இராணுவம் தெரிவித்துள்ளது.

மஞ்சள் பயிரிடப்படும் இந்த திட்டத்தினை தோட்டத் தொழில்துறை மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர், டொக்டர். ரமேஷ் பதிரண, மற்றும் கௌரவ விவசாய இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர, இராணுவத்தின் விவசாயம் மற்றும் கால்நடை திணைக்களத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் இந்திரஜித் கந்தனாராச்சி ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

இந்த பயிர்ச்செய்கை திட்டத்திற்கான ஆரம்பகட்ட நிலப்பண்படுத்தல் செயற்பாடுகளை இலங்கை இராணுவத்தின் பொதுச்சேவைகள் படையணி ஒரு மாதத்திற்கு முன்னர் முன்னெடுத்திருந்தது. பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் குறித்த படையணியினாலேயே பராமரிக்கப்பட உள்ளது.

தொடராக முன்னெடுக்கப்படவுள்ள மஞ்சள்  பயிர்ச்செய்கை திட்டத்தின் இரண்டாம் கட்டம் பலல்ல இராணுவ பயிர்செய்கை காணியிலும் மூன்றாம் கட்டம் ரம்புகன் ஓயா இராணுவ பயிர்செய்கை காணியிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்போது  இராணுவம் காய்கறிகள், அரிசி, முட்டை, பழங்கள், பால் பொருட்கள் மற்றும் தானியங்கள் ஆகியவற்றை பயிரிட்டு வருகின்றது.

மேலும், 200 ஏக்கர்  காணியில் மிளகாய் பயிர்ச் செய்கையும், 1000 ஏக்கர் காணியில் தெங்கு பயிர்ச் செய்கையும், 500 ஏக்கர் காணியில் மாமர பயிர்ச் செய்கையும், 2000 ஏக்கர் காணியில் முந்திரிகை பயிர்ச் செய்கையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ வீரர்கள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.