சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகளுடன் 40 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

நவம்பர் 07, 2020

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 2186 கடலட்டைகளுடன் 40 சந்தேகநபர்கள்  வடமத்திய மற்றும் வடமேல் கடற்படை கட்டளையகங்களினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது  கைது செய்யப்பட்டனர்.

மன்னார் பிரதேசத்தில் உள்ள வலைப்பாடு, நாச்சிக்குடா, கொண்டம்பிட்டி கடற்கரைகளில் வடமத்திய கடற்படை கட்டளையைகத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 1544 கடல் அட்டைகளை கைப்பற்றியுள்ளதுடன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட ஐந்து மீன்பிடிப் படகுகளையும் கைப்பற்றினர்.

இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் மன்னார் வலைப்பாடு, யாழ்ப்பாணம், நாச்சிக்குடா மற்றும் அரிப்பு ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 19 தொடக்கம் 58 வயதுக்கு உட்பட்டவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது மேலும் 21 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மீன்பிடி உபகரணங்கள் அடங்கிய ஐந்து மீன்பிடிப் படகுகள், சுழியோடல் உபகரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.

தேவம்பிட்டிய மற்றும் துணுக்காய் பிரதேசத்தில் கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து  மேற்கொண்ட இது போன்ற மற்றுமொரு நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக படிக்கப்பட்ட  63 கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டன.

இதேவேளை, கொண்டாச்சிக்குடாவிலிருந்து அரிப்பு பகுதி வரையிலான கடற்கரையோரங்களில் வடமத்திய கடற்படை கட்டளையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 19 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 642 கடல் அட்டைகள் மற்றும் இதற்காகப் பயன்படுத்தப்பட்ட நான்கு மீன்பிடிப் படகுகள் என்பன கைப்பற்றப்பட்டன.

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட இந்த நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கைகள் அனைத்தும் சுகாதார வழிகாட்டலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.