தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள கடுமையாக ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்படும்

நவம்பர் 09, 2020

மேல் மாகாணம் மற்றும் பிற பிரதேசங்களில் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்டது.

எவ்வாறாயினும் கொழும்பு கம்பஹா களுத்துறை கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலுள்ள 25 பொலிஸ் பிரதேசங்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக குருநாகல் நகரம் மற்றும் பாணந்துறை வேகந்த மேற்கு கிராம சேவகர் பிரிவு என்பனவும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

குருநாகல் மாவட்டத்தில் ஏற்கனவே தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட பிரதேசங்களில் இலிப்புகெதர மற்றும் கடவீதிய கிராம சேவகர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் குளியாப்பிட்டிய பொலீஸ் பிரதேசத்தில் கலகெதர, ஹம்மலாவ மற்றும் கழுகமுகவ கிராமசேவையாளர் பிரிவு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

அத்தோடு கந்தானை மற்றும் மஹாபாகே ஆகிய பொலிஸ் பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் எனினும் அப்பிரதேசங்களில் வாகனங்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை தனிமைப்படுத்தல் ப காலத்தைப் பூர்த்தி செய்த 63,921 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் முப்படையினரால்  மேற்பார்வை செய்யப்படும் 27 தனிமைப்படுத்தல் மையங்களில் 2,409 பேர் தனிமைப்படுத்தல் உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை 602,850 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 10,632 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 510 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் புறநா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 13,929 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10,451 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 1,041 பேர் ஆடை தொழிற்சாலை என் ஊழியர்களாவர்.

மேலும் 562 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வெளியேறி உள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.