மாலியில் உள்ள இலங்கை படையினரின் தொழில்முறை மற்றும் ஒழுக்கத்திற்கு பாராட்டு
நவம்பர் 12, 2020மாலி நாட்டில் ஐ.நா. அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை படையினரின் செயல்திறன், உயர் மட்ட தொழில் நிபுணத்துவம் அனைத்து மட்டங்களிலும் உள்ள ஒழுக்கம் என்பவற்றை ஐ.நா. அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள படைகளின் கட்டளைத் தளபதி பாராட்டியுள்ளார்.
மாலியில் உள்ள ஐக்கிய நாடுகளின் பல பரிமாண ஒருங்கிணைந்த படை நடவடிக்கை கீழ் உள்ள இலங்கை படைவீரர்கள் 13 ஒக்டோபர் 2020 வரை பிரமுகர்கள் பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக செயற்பட்டு லொஜிஸ்டிக் விரிவாக்க பணிகளில் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக்கொண்டுள்ளது.
வழக்கமான பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட இலங்கை படைவீரர்கள், பொதுமக்களுக்கோ அல்லது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சக படைவீரர்களுக்கோ எந்தத் தீங்கும் ஏற்படாமல் 10க்கும் மேற்பட்ட வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.
லெப்டினன்ட் கேணல் ஸ்ரீநாத் கால்லகே தலைமையிலான இலங்கைப் படையணியில் 2019 நவம்பர் 13 முதல் 20 அதிகாரிகள் மற்றும் 223 படைவீரர்கள் மாலியில் அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பழங்குடி போராளிகளால் புதைக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட அந்த வெடி பொருட்களில் காவோ நகரத்திலிருந்து மேனகா நகரம் வரையான வீதியோரத்தில் புதைக்கப்பட்டிருந்த 5 வெடி பொருட்களும் மற்றும் காவ் முதல் மொப்தி நகரம் வரையிலான வீதியோரத்தில் புதைக்கப்பட்டிருந்த 5 வெடி பொருட்களும் மீட்கப்பட்டன. குறித்த வீதிகள், பிரமுகர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் படைவீரர்கள் பெருமளவில் பயணம் செய்கின்ற வீதிகளாகும்.
அந்த வெடிபொருட்களில் சில ரிமோட் கண்ட்ரோல் செயல்படுத்த கூடியவையாகும். இவைகள் வெடித்தால் பாரிய சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவை.
ஐ.நா. அமைதிகாக்கும் படையணியின் கட்டளைத் தளபதி மற்றும் ஐ.நா. அதிகாரிகள் ஆகியோர் இலங்கை படையினர் நிலைகொண்டுள்ள முகாமுக்கு வருகை தந்து, இலங்கை படையினரின் சிறந்த செயல்திறன் மற்றும் மாலியில் தங்கள் கடமைகளைச் செய்யும்போது அவர்களின் விவேகம் என்பவற்றை பாராட்டினர்.
மாலி நாட்டின் அமைதி காக்கும் பணியில் 1 வது இலங்கைப் படையினர் டிசம்பர் 2017 இல் அங்கு நிலை நிறுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து, தற்போதைய இலங்கைப் படையினர் 13 நவம்பர் 2019 அன்று நிலை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.