தொற்றா நோயுள்ள மக்களை வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கமாறு ஜனாதிபதி வலியுறுத்து

நவம்பர் 12, 2020
  • மேல் மாகாணத்தில் உள்ளவர்கள் மாகாணத்திற்கு வெளியே பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது
  • தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க விஷேட கவனம்
  • ஒவ்வொரு பிராந்திய மருத்துவமனைகளும் செயல்பட வேண்டும்

வைரஸ் நிலைமைகள் மேலும் பரவாமல் இருக்க மேல் மாகாணத்திலிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கான போக்கு வரத்தினை தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று  கொரோனா வைரஸ் பரவல் தடுக்கும் ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற நாளாந்த சந்திப்பின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.  

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு பொருட்களை வழங்குவதில் சம்பந்தப்பட்ட தரப்பினரால் சரியான வழிமுறைகளைப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் ‘உள்நுழையவோ’ அல்லது ‘வெளியேறவோ’ எவரையும் அனுமதிக்கக் கூடாது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

தற்போதுள்ள நிலைமையில்,  வைரஸ் பரவலை தடுக்க பொருந்தக்கூடிய வழிகாட்டுதல்களை பரப்பும் வகையிலும்  மற்றும் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுபவர்களைப் பாதுகாக்கும் வகையிலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னுரிமை அடிப்படையில் விரைவாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

முக்கிய வைத்தியசாலைகளை அணுகுவதில் மக்கள் சந்திக்கும் கஷ்டங்களை உணர்ந்த ஜனாதிபதி, இதற்காக நாடு முழுவதும் உள்ள பிராந்திய வைத்தியசாலைகளை விரைவில் திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

குறித்த பிராந்திய வைத்தியசாலைகளுக்கு தேவையான வைத்தியர்கள், தாதியர்கள், செவிலியர்கள், மருத்துவச்சிகள் மற்றும் பிற அத்தியாவசிய பணியாளர்கள் ஆகியோர் அனுப்பப்பட வேண்டும் என  வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.