இராணுவத்தினரால் புதிய ட்ரோன் படையணி ஆரம்பிப்பு
நவம்பர் 13, 2020இலங்கை இராணுவத்தின் பீரங்கி படையணியின் புதிய பிரிவான 15வது ட்ரோன் படையணி நேற்றைய தினம் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் தலைமையில் இராணுவ தலைமையகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கை பீரங்கி படையணியின் கீழ் வரு புதிய 15 வது ட்ரோன் படையணி, குறுகிய மற்றும் நடுத்தர தூரங்களுக்குள் செயல்படும் உயர் தொழில்நுட்ப கெமராக்கள் மற்றும் கண்காணிப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடிய கண்காணிப்பு கேமராக்கள் கொண்ட குவாட் கொப்டர்களை கொண்டுள்ளது.
வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் புதிய சவால்களுக்கு இராணுவம் முகம் கொடுக்கும் வகையில் இந்த படையணி தயார்நிலைப்படுத்தப்பட்டுள்ளது.
யுத்த சூழ்நிலையில் கையாளப்படும் மென் நடவடிக்கை போக்கு, இயற்கை அனர்த்தங்கள் மற்றும் மனிதனால் உருவாக்கப்படும் பேரழிவுகள், வெள்ளம், ஏனைய பேரழிவுகள், அவசரகால சூழ்நிலைகள், இரசாயனப் போர், கொவிட்-19 போன்ற சமூகத்தை பாதிக்கக்கூடிய தொற்றுநோய்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த படைப்பிரிவின் மதிப்பு மற்றும் தொழில்நுட்ப முக்கியத்துவம் என்பன லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் எடுத்துரைக்கப்பட்டது.
இராணுவ தலைமையக வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த புதிய படைப்பிரிவின் ட்ரோன் தொகுதியை பார்வையிட்ட இராணுவ தளபதி முதல் ட்ரோன் கருவியை செயற்படுத்தி படையணியின் செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் இலங்கை நனோ தொழில்நுட்ப நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. மஞ்சு குணவர்தன, இராணுவத்தின் இந்த புதிய பிரிவினை ஸ்தாபிக்க ஒத்துழைப்பு வழங்கிய டீஏஎஸ்ஐஎஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இரண்டு பிரதிநிதிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.