மொத்தம் 10,111 பீசிஆர் சோதனைகள் நேற்று முன்னெடுப்பு

நவம்பர் 13, 2020

நாட்டில் இதுவரை 637,122 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 10,111 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 30 தனிமைப்படுத்தல் மையங்களில் மொத்தம் 2, 845 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 373 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  15,722 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்ட 373 தோற்றாளர்களில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த நான்கு இலங்கை பிரஜைகளும் அடங்குவதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மினுவாங்கொடை கொத்தணி வைரஸ் தொற்றுக்குள்ளான அவர்களின் மொத்த எண்ணிக்கை 12,226 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில்  தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும் வரை ஆள் நடமாட்டங்களை கண்காணிக்க ட்ரோன் கெமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamil