நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி

நவம்பர் 14, 2020

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யும் எனவும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்புகளில் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம், மன்னார், காங்கேசந்துறை மற்றும் திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

சிலாபத்திலிருந்து புத்தளம், மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாகதிருகோணமலை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலையுடன் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.