உலக போர் வீரர்கள் ஞாபகார்த்த 'பொப்பி மலர் தினம்'
நவம்பர் 16, 2020இலங்கை இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற போர்வீரர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக போர் வீரர்கள் ஞாபகார்த்த 'பொப்பி மலர் தினம்' நேற்று கொழும்பு விகார மகா தேவி பூங்காவில் உள்ள நினைவுத் தூபியில் இடம் பெற்றது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வரையறுக்கப்பட்ட அங்கத்தவர்கள் மாத்திரம் சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கமைய இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
முதலாம் மற்றும் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது உயிரிழந்த படை வீரர்களை நினைவு கூரும் இத்தினம் 'படைவீரர்கள் ஞாபகார்த்த தினம்' எனவும் அழைக்கப்படுகின்றது.
இந்த ஞாபகார்த்த தின நிகழ்வில் இலங்கை இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற போர்வீரர்கள் சங்க தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உபுல் பெரேரா, அதன் பொது செயலாளர் லெப்டினன்ட் கேர்ணல் (ஓய்வு) அஜித் சியம்பலாப்பிட்டிய, ஓய்வு பெற்ற சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், ஓய்வுபெற்ற படைவீரர்கள், போர் வீரர்கள், சேவையில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள், முப்படைகளின் சேவையில் உள்ள அதிகாரிகள் மற்றும் அதிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.