அனைவருக்கும் ஆசி வேண்டி சுதந்திர சதுக்கத்தில் 21 நாட்கள் பிரித் பாராயணம்
நவம்பர் 19, 2020அனைவருக்கும் ஆசி வேண்டி நடத்தப்பட்ட பிரித் பாராயண ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொண்டார். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று (18) மாலை ஆரம்பமான இந்த பிரித் பாராயணம் தொடர்ச்சியாக 21 நாட்கள் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர்கள், வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள், முன்னணி சுகாதார உத்தியோகத்தர்கள், இலங்கையர்கள் அனைவருக்கும் அதேபோன்று ஒட்டுமொத்த உலகமக்களுக்கும் ஆசி வேண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரத்னசூத்ர" பாராயணம் செய்யும் ஆரம்ப வைபவத்தில் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்னவும் கலந்து கொண்டார்.
நேற்று மாலை முதல் தொடர்ச்சியாக 21 நாட்களுக்கு தொடர்ந்து 24 மணி நேரமும் மகா சங்கத்தினரால் ரத்னசூத்ர, கினி பிரித், ஜய பிரித் ஆகியன பாராயணம் செய்யப்படவுள்ளன.
இந்த நிகழ்வில் முப்படைகளின் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரத்னசூத்ர மந்திரம் தீய ஆவிகளை அகற்றவும், கடந்த கால தீய தாக்கங்கள் மற்றும் கொள்ளைநோய்களிலிருந்து சமுதாயத்தை பாதுகாக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சூத்திரங்கள் இந்தியாவில் உள்ள விஷாலா நகரத்தில், நோய் மற்றும் பஞ்சத்தை போக்க மகா சங்கத்தினரால் பாராயணம் செய்யப்பட்டதாக வரலாற்று பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.