நாம் நாட்டைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் - ஜனாதிபதி

நவம்பர் 19, 2020
  • சீர்குலைந்திருந்த புலனாய்வுத்துறை சேவைகளை மறுசீரமைத்து அவற்றுக்கு புத்துயிரளிக்க நடவடிக்கை

மக்கள் என்னிடம் முன்வைத்த முக்கிய வேண்டுகோள் ‘நாட்டை காப்பாற்றுங்கள்’ என்பதாகும். இந்த குறுகிய காலத்தில் மக்கள் கோரியபடி நாட்டைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின்போது ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

எனவே 'மக்கள் இது பற்றி இனியும் அச்சப்படவோ சந்தேகப்படவோ தேவையில்லை' ஜனாதிபதி  தெரிவித்தார்.

தான் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட  ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு  ஒரு பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின்போது ஜனாதிபதி  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தனது ஆட்சிக் காலத்தில், இனம், மதம் என்ற பேதமின்றி, அனைத்து குடிமக்களுக்கும் நீதியை உறுதி செய்யும், அவர்களின் உரிமையை பாதுகாக்கும் ஒரு ஆட்சியை நிறுவுவதாகவும், இந்த நாட்டின் உச்ச அரசியலமைப்பின் படி நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகவும், பௌத்த சாசனத்தை பாதுகாத்து போசிப்பதாகவும் அன்று ருவன்வெலிசேய புன்னிய பூமியில் வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் தான் எப்போதும் செயற்பட்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவதற்கு முன்பு, மத தீவிரவாதிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும்  பாதாள உலக செயற்பாடுகள் தீவிரம் பெற்று நாடு முழுவதும் கொலைகளின் அலை ஆரம்பமாகியிருந்தது. இலங்கை சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களின் மையமாக மாறியிருந்தது. புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் பலவீனமடைந்திருந்த காரணத்தினால் நாடு பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது. தொல்பொருள் பெறுமதிவாய்ந்த வரலாற்று தளங்கள் கூட தீவிரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.

நாம் ஆட்சிக்கு வந்ததும், நாட்டின் பாதுகாப்புப் படைப் பிரிவுகளுக்கு பொருத்தமான அதிகாரிகளை நியமித்து அவர்களது பொறுப்புகளை குறைவின்றி நிறைவேற்ற அவர்களுக்கு அதிகாரம் அளித்தேன். சீர்குலைந்திருந்த புலனாய்வுத்துறை சேவைகளை மறுசீரமைத்து அவற்றுக்கு புத்துயிரளிக்க நடவடிக்கை எடுத்தேன். அந்த வகையில் எந்தவிதமான தீவிரவாதமும் மீண்டும் தலை தூக்குவதற்கான சாத்தியத்தை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம் என குறிப்பிட்டார்.

மேலும்  அவர், போதைப்பொருளைக் கட்டுப்படுத்த மிகவும் முறையான மற்றும் செயற்திறமான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களைப் போன்று சிறைச்சாலைகளுக்குள்ளிருந்து போதைப்பொருள் கடத்தல் அல்லது பாதாள உலக நடவடிக்கைகளை மேற்கொள்ள இனியும் இடமில்லை என தெரிவித்தார்.

இந்த நாட்டில் மக்கள் இனியும் பாதாள உலக கும்பல்கள், மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்கள் மற்றும் மோசடி செய்பவர்களுக்கு பயந்து வாழ வேண்டியதில்லை. எதிர்காலத்தில் இந்த திட்டத்தை மேலும் பலப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுப்போம் எனவும் சுட்டிக்காட்டினார்.

தொல்பொருள் பெறுமதிவாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதற்கும் எமது பௌத்த மற்றும் தேசிய மரபுரிமைகளை பாதுகாப்பதற்கும் தான்னால்  ஒரு விசேட செயலணி அமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி  மேலும் தெரிவித்தார் .

படைவீரர்களை காட்டிக்கொடுக்கும், தேசிய வளங்களை விற்கும், குறுகிய கால இலாபத்திற்காக எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஏற்கத் தயாராக இருக்கும், நாட்டின் உள் விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் தலையிட அனுமதிக்கும் யுகம் இப்போது முடிந்துவிட்டது.

 நான் எப்போதும் சவால்களுக்கு முகம்கொடுத்து வெற்றிபெற்றவன். நான் அச்சுறுத்தல்களுக்கு பயந்த நபர் அல்ல. பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து அவற்றை தீர்ப்பதன்றி அவற்றிலிருந்து விடுபட்டு ஓடும் பழக்கம் என்னிடம் இல்லை என தெரிவித்த அவர்,  இந்த நாட்டின் சுபீட்சமே எனது எதிர்பார்ப்பு. அந்த நோக்கத்தை அடைய மனசாட்சியுடன் தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்க நான் தயங்க மாட்டேன் என உறுதியளித்தார்.

நான் எனது நாட்டை நேசிக்கிறேன். எனது நாட்டைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். என்னிடம் எனது நாடு குறித்த ஒரு தொலைநோக்கு உள்ளது. ஒரு பயனுறுதிமிக்க பிரஜையாக, ஒற்றுமை உணர்வோடு, ஒழுக்கப் பண்பாட்டுடன் செயற்பட்டு, உங்களினதும் எனதும் தாய்நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதற்கு பங்களிக்குமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார்.