உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

நவம்பர் 19, 2020

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி. ராஸியா பெண்ஸே பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வு கமல் குணரத்னவை இன்று (நவம்பர், 19) சந்தித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் பல்வேறு நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட்டு வருகின்றது. இதற்கமைய சர்வதேச தேடல் மற்றும் மீட்பு ஆலோசனை  குழுக்களுக்கான பயிற்சி, தொழில்நுட்ப வசதிகள் மற்றும் நிதி அனுசரணை என்பவற்றுடன் மாவட்ட மட்ட துரித செயற்பாட்டு  மையங்களின் திறன்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.

பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் அவசர நிலைகளின் போது  கையாளும் ஒரு தொகை உபகரணங்களை பாதுகாப்பு செயலாளரிடம்  கையளித்த கலாநிதி ராஸியா பெண்ஸே, சுகாதார அவசர நிலைமைகளின் போது அதற்கான தயார் நிலையை ஏற்படுத்தல் உலக சுகாதார ஸ்தாபனத்தின் முதன்மையான பணியாகும் என தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்த  பாதுகாப்புச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்டு வரும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் இந்த சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக  பாதுகாப்புச் செயலாளர் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான  வதிவிடப் பிரதிநிதி ஆகியோருக்கிடையில் கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல்  (ஓய்வு) சுதந்த ரணசிங்க மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தேசிய தொழில்முறை அதிகாரி வைத்தியர் சபுமல் தனபால ஆகியோரும் கலந்து கொண்டனர்.