தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பல பகுதிகள் நாளை முதல் விடுவிப்பு

நவம்பர் 22, 2020

கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பொரள்ளை, வெல்லம்பிட்டிய, கொழும்பு கோட்டை, கொம்பனித் தெரு ஆகிய பொலிஸ் பிரதேசங்கள்  நாளை அதிகாலை 5.00 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொம்பனித்தெரு பொலிஸ் பிரதேசத்தில் உள்ள வேகந்த கிராம சேவையாளர் பிரிவு, பொரள்ளை பொலிஸ் பிரதேசத்தில் உள்ள வனாத்தமுள்ள கிராம சேவையாளர் பிரிவு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, மோதரை, புளூமெண்டல், கொட்டாஞ்சேனை, கரையோர பகுதி, ஆட்டுப்பட்டி தெரு, டாம் வீதி, கோட்டை, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொடை மற்றும் மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட  பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் ஜா- எல மற்றும் கடவத்தை ஆகிய பொலிஸ் பிரதேசங்கள்  நாளை  முதல் விடுவிக்கப்படவுள்ளதாகவும் நீர்கொழும்பு, வத்தளை பேலியகொடை, ராகம, மற்றும் களனி ஆகிய பொலிஸ் பிரிவுகள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட  பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.