வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பிரதேசம்

நவம்பர் 22, 2020

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம்  அடுத்த 24-48 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு - வடமேற்கு திசையில் உள்ள இந்த தாழமுக்கம்  நவம்பர் 24ம் திகதியளவில் இலங்கையின் வடக்கு, கிழக்கு கரைகளை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதன் காரணமாக கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாக அந்த திணைக்களம்  மேலும் தெரிவித்துள்ளது.

குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் காரணமாக அடுத்த சில நாட்களில் வட அகலாங்குகள் 05N - 12N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 80E – 90E இற்கும் இடையில் உள்ள கடற்பரப்புகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை, கடுமையான அல்லது மிகக் கடுமையான காற்று, கொந்தளிப்பான அல்லது மிகவும் கொந்தளிப்பான கடல் போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும். கொழும்பிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாக  காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Tamil