வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

நவம்பர் 24, 2020

வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து திருகோணமலை கரைக்குக் கிழக்காக ஏறத்தாழ 280 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணித்தியாலங்களில் இலங்கையின் வடக்கு, கிழக்கு கரைகளை அண்மித்ததாக இந்தியாவின் தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதன் தாக்கம் காரணமாக கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் சில இடங்களில் 50-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப் படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகளில் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடக்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து மாத்தறை ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

இதனால் கடலில் பயணிப்போரும்  மீனவ சமூகமும் மிக அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.