இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு
நவம்பர் 27, 2020இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் டோவால் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (27) சந்தித்தார்.
கொழுபில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கு இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பாக சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறை, புலனாய்வு தகவல் பகிர்வு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான வழிகள் ஆகியவை தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இதேவேளை, அண்மையில் எம்டி நியூ டைமண்ட் எண்ணெய்க் கப்பல் விபத்துக்குள்ளான போது இந்திய தரப்பினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கு பாதுகாப்புச் செயலாளர் நன்றி தெரிவித்தார்.
இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கிடையில் நாளை நடைபெறவுள்ள 4வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கடல்சார் கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொழும்புக்கு வருகை தந்துள்ளார்.
புதுடில்லியில் ஒரு முன்னணி சிந்தனைக் குழுவான விவேகானந்தா சர்வதேச மையத்தின் ஸ்தாபக பணிப்பாளராக உள்ள இவரினால் ‘தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள்’ தொடர்பான விடயங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.
இந்தியாவின் உயர்ந்த பாதுகாப்பு விருதான கீர்த்தி சக்கர விருதை 1980ம் ஆண்டு பெற்றுக்கொண்டுள்ள அஜித் டோவால், இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக 2014ம் ஆண்டு மே மாதம் 30ம் திகதி முதல் செயற்பட்டு வருகின்றார்.
மேலும் இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.