பாதுகாப்புச் செயலாளரினால் 31 மனநல ஆலோசகர்களுக்கு நியமனம் கடிதங்கள் வழங்கி வைப்பு

டிசம்பர் 02, 2020

உதவி மனநல ஆலோசகர்கள் மற்றும் மனநல ஆலோசக உதவியாளர்கள் 31 பேருக்கு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவினால் புதிதாக நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ராஜகிரியவில் உள்ள தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையில் இன்று (டிசம்பர், 02) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய பாதுகாப்புச் செயலாளர் " போதைப் பொருட்கள் அற்ற ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான தேசத்தை உருவாக்குவதற்காக  முன்னின்று உழைத்த தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின்  ஊழியர்களின் அற்பணிப்புடன் கூடிய செயற்பாட்டினை பாராட்டினார்.

நமது நாட்டின் அப்பாவி இளைஞர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக  தமது முழு நேரத்தையும் பயன்படுத்தி  அவர்களுக்கான சேவைகளை அளிக்குமாறு  புதிதாக நியமனம் பெற்ற  உதவி மனநல ஆலோசகர்கள் மற்றும் மனநல ஆலோசக உதவியாளர்களிடம்  கோரிக்கை விடுத்தார்.

இன்றைய நாள் நிகழ்வுடன் இணைந்தாக, பொது மக்களுக்கள், ஆலோசனை, சிகிச்சை வசதிகள் மற்றும் புனர் வாழ்வு போன்றவற்றுக்கு தேவையான உதவியை உடனடியாக பெற்றுக் கொள்ளும் வகையில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையினால் 1927 எனும் துரித தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டது. கொவிட்- 19  தொற்றுநோய் நிலை காரணமாக குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் தேவைப்படுவோர் தமக்கான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த சேவையானது, 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படுத்தப்படவுள்ளது.

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையானது இலங்கையில் இருந்து போதைப்பொருள் பாவனையை முற்றாக அகற்றும் செயற்பாட்டினை மேற்கொள்ளும் அதேவேளை போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு  புனர்வாழ்வு அளிப்பதற்கான செயற்பாட்டினை முன்னெடுக்கும் பிரதான அரச நிறுவனமாகும்.

கொழும்பு, கண்டி, காலி மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நாடு முழுவதற்குமான  நான்கு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்கள் இந்த சபையின் மேற்பார்வையின் கீழ்  நடத்தப்படுகின்றன. இந்த நிலையங்களில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மனநல ஆலோசனை மற்றும் வதிவிட மருத்துவ சேவைகள் என்பன அளிக்கப்படுகின்றன.

இந்த நிகழ்வில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் வைத்தியர் லக்னாத் வெலகெதர, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. சமந்தி வீரசிங்க,தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட மனநல துறை விரிவுரையாளர் பேராசிரியர் ஞானதாஸ பெரேரா, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசிங்க மற்றும்  தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.