நாட்டில் 13,423 பீசீஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுப்பு

டிசம்பர் 03, 2020

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 878 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 25,409 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய  தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 402 பேரும், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 188  பேரும் களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த 106 பேரும் எனவும் கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 21,857 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, 14,896  பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நாட்டில் 13,423 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளபட்டதாகவும் கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 487 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கொவிட்-19 பரவல் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 335 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் ஜோர்டானிலிருந்து  284 பேரும்  கட்டாரிலிருந்து  49 பேரும் சீனாவிலிருந்து 02 பேரும் ஓமான் மற்றும் இந்தியாவிலிருந்து  54 பேரும்  வருகை தந்தனர். இவர்கள் அனைவரும் முதற்கட்ட மருத்துவ பரிசோதனையின் பின்  தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,303 ஆக உயர்வடைந்துள்ளது. படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 59 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 6,400 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 124 ஆக  அதிகரித்துள்ளது.