புரெவி சூறாவளி படிப்படியாக வலுவிழக்கிறது - வளிமண்டலவியல் திணைக்களம்

டிசம்பர் 03, 2020

புரெவி சூறாவளியானது தற்போது மன்னாருக்கும் பூநகரிக்கும் இடையில் கரையோரப் பிரதேசங்களுக்கு அருகே நிலை கொண்டுள்ளதுடன் படிப்படியாக நாட்டை விட்டு விலகிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான வேகம் கொண்ட இந்த சூறாவளியானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 90 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும்.

வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுகின்றது.

கொழும்பிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் நாளை காலை வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் ஏனைய கடற்பரப்புகளில் மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் இடையிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனைய கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும்கொந்தளிப்பாக அல்லது உயர் அலைகளுடன் காணப்படும்.

நீர்கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாககாங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளில் கரையோரத்தை அண்டிய பகுதிகளில் கடல் அலைகள் 2.0 - 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும்  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.