புரெவி சூறாவளி மேலும் வலுவிழந்துள்ளது - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

டிசம்பர் 04, 2020

புரெவி சூறாவளியானது ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவிழந்து இன்று அதிகாலை மன்னாருக்கு மேற்குத் திசையில் ஏறத்தாழ 143 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருந்தது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அது நாட்டை விட்டு மேலும் விலகிச் செல்கின்றதனால் சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் குறிப்பாக காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு முதல் தென்கிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது 55-65 கிலோ மீற்றர் வரை காணப்படும். இக் கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 75கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும், புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும். இக் கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தெற்கு முதல் தென்கிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.