‘புரெவி’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இராணுவம் மற்றும் கடற்படையினர் உதவி

டிசம்பர் 05, 2020

இலங்கை இராணுவமும் கடற்படையினரும் இம்மாதம் 2ம் திகதி ஏற்பட்ட சூறாவளியால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ள பொதுமக்களுக்கு  உதவுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

இதற்கமைய  யாழ், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள இராணுவத்தினர்  பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உலர்ந்த மற்றும் சமைத்த உணவு மற்றும் பிற வசதிகளை வழங்கி வருகின்றனர்.

வடக்கு கடற்படை கட்டளையகத்தின் கடற்படை வீரர்கள், புங்குடுதீவில் ஏற்பட்ட திடீர் வெள்ள நிலைமைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததுடன் 50 குடும்பங்களை தீவில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உலர்ந்த மற்றும் சமைத்த உணவு மற்றும் பிற வசதிகளை கொவிட்-19 தடுப்பு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து வழங்கி வருகின்றனர்.

மேலும், புயலின் விளைவாக இரணைதீவில் சிக்கித் தவித்த 86 மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கிளிநொச்சி பிரதேச செயலகம் மற்றும் கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வழங்கிய உதவிகளை வட மத்திய கடற்படை கட்டளையகம் வழங்கியது.

இதேவேளை, அனுராதபுரத்தில் நான்கு கடற்படை நிவாரணக் குழுக்களும், மன்னார் வங்காளையில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் புஸ்ஸதேவவின் நான்கு நிவாரணக் குழுக்களும், பூனேவ வில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் பண்டுகாபயவின் மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து இலங்கை கடற்படை பல்வேறுநல்ல திட்டங்களை முன்னெடுத்து வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.