தனது முன்னைய பெருமையை மீண்டும் பெற்று வரும் பாதுகாப்பு திணைக்களம் - பாதுகாப்பு செயலாளர்

டிசம்பர் 07, 2020
  • பயங்கரவாதத்தால் அச்சுறுத்தப்பட்ட அனைத்து முன்னணி கிராமங்களையும்  சிவில் பாதுகாப்பு படை   பாதுகாத்தது
  • யுத்தத்திற்குப் பின்னர் சிவில் பாதுகாப்பு படை  தேசத்தைக் கட்டியெழுப்ப பயன்படுத்தப்பட்டது

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சிவில் பாதுகாப்பு படை திணைக்களம் தனது முன்னைய பெருமையை மீண்டும் பெற்று வருவதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

தாய்நாட்டுக்கான சேவையை உயரிய முறையில் மீண்டும் வழங்குவதற்காக ஓய்வு பெற்ற பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

சில ஒழுக்கமற்ற கடமைகளில்  சிவில்  பாதுகாப்பு படை வீரர்கள் பணிக்கு  அமர்த்தப்பட்டதை 2016ல் ஓய்வு பெற்றவேளையில் தான் அவதானித்ததாகவும், சிவில் பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்ட காலத்தில் கொள்கையற்ற பணிகளில் ஈடுபட்டது  வருத்தமளிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

போருக்குப் பின்னரான  காலத்தில் சிவில்  பாதுகாப்பு படையின் முன்னையநாள்  பெருமையை நினைவுகூர்ந்த அவர், "போர் வெற்றிகரமாக முடிந்தபின்னர், சிவில்  பாதுகாப்பு படையின் பலம், அபிவிருத்தி  மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளுக்கு  பயன்படுத்தப்பட்டது" என்றார்.

யுத்த காலத்தில் சிவில்  பாதுகாப்பு படையினர் வழங்கிய  பங்களிப்பை பாராட்டிய  பாதுகாப்பு செயலாளர், "பயங்கரவாத  அச்சுறுத்தலுக்குள்ளான அனைத்து முன்னணி கிராமங்கள், புனித மத தலங்கள் மற்றும் அப்பாவி விவசாய சமூகங்கள் ஆகியவற்றை சிவில்  பாதுகாப்பு படைவீரர்கள் பாதுகாத்தனர், இதன் காரணமாகவே,  யுத்தம் இடம்பெற்ற களமுனைகளுக்கு அதற்கென பயிற்றுவிக்கப்பட்ட எமது இராணுவத்தை அனுப்பி வைக்க முடிந்தது" என தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரி கேட்போர் கூடத்தில் நேற்று மாலை இடம்பெற்ற   சிவில்  பாதுகாப்பு படை வீரர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபரணங்கள் மற்றும் பரிசுப் பொதிகளை அன்பளிப்பாக வழங்கி வைக்கும்  நிகழ்வில் உரையாற்றும் போதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிவில்  பாதுகாப்பு படையின் சேவை வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட அரச பொது பரீட்சைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், மடிக்கணினிகள் மற்றும் நிதியுதவி வழங்கும் நிகழ்வு, சிவில்  பாதுகாப்பு படையின் சேவை வனிதா பிரிவின் தலைவி குமுதினி பீரிஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தொடந்து உரையாற்றிய பத்துகாப்பு செயலாளர், 1980களின் நினைவுகளை நினைவு கூர்ந்த அவர், "இராணுவப் பணிகளுக்காக மேலும் அதிகமான படைவீரர்களை அனுப்புவதற்கு காலஞ்சென்ற லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன ஆகிய இருவரும் விரும்பினர், பயங்கரவாதிகளை தோற்கடிக்க புதிய உத்திகளை கண்டறிய வேண்டியிருந்தது, ஆனால் அந்த சகாப்தத்தில் நாங்கள் ஒரு சிறிய இராணுவமாக இருந்தமையால் அது அரிதாகவே நிர்வகிக்கப்பட்டது" என்றார்.

"இதேவேளை, எல்லைப்புற முன்னணி கிராமங்களைத் தாக்கும்போது தீவிரவாதிகள் எங்களுக்கு எதிராக "போர்ஸ் மல்டிப்ளையர்" எனும் தந்திரோபாயத்தை கடைப்பிடித்தனர்" என தெரிவித்த அவர், "கிராமவாசிகளை பாதுகாப்பதற்காக இதுபோன்ற தாக்குதல்கள் இடம்பெற்ற இடங்களுக்கு நானும் எனது படை வீரர்களுடன் சென்றிருக்கிறேன்” என குறிப்பிட்டார்.

இதன்போது "அவர்களில் சிலரை எங்களால் காப்பாற்ற முடிந்தாலும், அப்பாவி ஏழை கிராமவாசிகளின் விலைமதிப்பற்ற உயிர்கள் காவு கொல்லப்பட்டதனை தான் கண்டதாகவும்  அதேபாணியில் பயங்கரவாதிகள் பல முன்னணி கிராமங்களைத் தொடர்ந்து தாக்குகியதாகவும் இதனால் அந்த பகுதிகளில் உள்ள கிராமங்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தை அனுப்ப கட்டாயத்திற்கு உள்ளானதாகவும்அவர் கூறினார்.

அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய கிராமங்களில்  பாதுகாப்பில் ஈடுபடுத்த  போதுமான வீரர்கள் இல்லாத நிலையில், அரசாங்கம் அவர்களது சொந்த கிராமத்தை பாதுகாப்பதற்காக "ஊர்க் காவல் படை" என்ற அமைப்பை உருவாக்கியது எனவும், "பின்னர் இந்த கிராம வாசிகளை கொடூரமான பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிடும் ஒரு போராட்ட சக்தியாக மாற்றியமைத்தது" எனவும்  பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

தன்னால்  எழுதப்பட்ட ‘ரோட் டு நந்திகடல்’  (நந்திக்கடலுக்கான பாதை) எனும் ஆங்கில பதிப்பு நூலினை மேற்கோள் காட்டிய அவர்  "ஊர்க்காவல் படையின் பணிகள் குறித்து இந்தப் புத்தகத்தில் ஒரு தனி அத்தியாயம் எழுதப்பட்டுள்ளதாகவும், அதில் அவர்களுக்கு பயிற்சி அளிக்க எடுக்கப்பட்ட கடுமையான முயற்சிகளையும், இறுதியில் அவர்களின் சாதனைகளையும் எடுத்துக் காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான  கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய  தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ரியர் அட்மிரல் (ஓய்வு) கலாநிதி சரத் வீரசேகர, சிவில்  பாதுகாப்பு படை ஸ்தாபக பணிப்பாளர்  நாயகமாக நியமிக்கப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

அதன் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களுடன், அவர்களுக்கு ஆயுதங்களுடன் சீருடைகள் என்பன  வழங்கப்பட்டன மற்றும் இன்று நாம் பார்க்கும் சிவில்  பாதுகாப்பு படையாக மாற்றப்பட்டது, அதன் மூலம் அவர்கள் முப்படைகளுக்கு மகத்தான ஒத்துழைப்பினை வழங்கும் வகையில்  மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளுக்கு எதிராக செயற்படும்  ஒரு பயமற்ற சக்தியாக மாற்றப்பட்டனர் என அவர் நினைவுகூர்ந்தார்.

இதனால் கிராமப் பாதுகாப்பிற்காக முன்னணி எல்லைப்புற  கிராமங்களில்  பாதுகாப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்ட அனைத்து இராணுவப் படைகளும் யுத்த நடைபெற்ற  பகுதிகளுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டன என அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த போது சிவில்  பாதுகாப்பு படையை மீள்கட்டமைப்பு செய்து  நாட்டுக்கு பாரிய  சேவையை வழங்கியதாக  மேஜர் ஜெனரல் குணரத்ன குறிப்பிட்டார்.

இறுதியில், அவர்கள் எல்லைப்புற கிராமங்களில் மிலேச்சத்தனமான  பயங்கரவாதிகளை தோற்கடித்த அதேவேளை, ஒரு இராணுவம் போலவே தங்கள் கடமையைச் செய்தனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சிவில்  பாதுகாப்பு படை வீரர்களின் குழந்தைகளுக்கான இந்த பயனுள்ள நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக சிவில்  பாதுகாப்பு படை சேவா வனிதா பிரிவின்  தலைவி குமுதினி பீரிஸிற்கு பாதுகாப்பு செயலாளர் தனது பாராட்டினை  தெரிவித்தார்.

'தரம் ஐந்து புலமைப்பரிசில்' மற்றும் சாதாரண நிலை பரீட்சையில் சிறந்து விளங்கிய சிவில்  பாதுகாப்பு படை வீரர்களின் பிள்ளைகளுக்கு பரிசில்களும் உதவித்தொகைகளும்  வழங்கப்பட்டன.
மேலும், பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு  புத்தகங்கள், மடிக்கணினிகள் மற்றும் நிதி உதவிகள் என்பன இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில், சிவில்  பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஓய்வு) ஆனந்த பீரிஸ், பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின்  தலைவி சித்திரராணி குணரத்ன, கடற்படை சேவா வனிதா பிரிவின்  தலைவி சந்திமா உலுகேத்தென்ன, விமானப்படை சேவா வனிதா பிரிவின்  தலைவி சர்மினி பத்திரான, புரவலர்கள், சிரேஷ்ட சிவில்  பாதுகாப்பு படை அதிகாரிகள், சிவில்  பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.