மடுவில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு மற்றும் மட்டக்களப்பில் பாடசாலை விளையாட்டு மைதானம் என்பன மக்களிடம் கையளிப்பு.
நவம்பர் 21, 2022வன்னி மாவட்ட செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மடு பெரியபாண்டிவிரிச்சான் பிரதேசத்தில் இராணுவத்தினரால் தேவையுடைய குடும்பமொன்றுக்கு புதிய வீடொன்று நிர்மாணிக்கப்பட்டு அண்மையில் கையளிக்கப்பட்டது.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 24வது கஜபா படையணி வீரர்களின் மனித வளம் மற்றும் பொறியியல் நிபுணத்துவத்துடன் இந்த வீட்டின் நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பயனாளியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராமவாசிகள் கலந்துகொண்ட எளிமையான நிகழ்வின் போது, இரண்டு பிள்ளைகளைக் கொண்ட விதவைத் தாய்யான திருமதி ராசு காளியம்மாவிடம் புதிய வீட்டின் சாவி கையளிக்கப்பட்டது.
இதேவேளை, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்த படையினரால் மட்டக்களப்பு மண்முனை வினாயநகர் வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு, அண்மையில் மாணவர்களிடம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இராணுவத் தளபதியிடம் கல்லூரியின் அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, மாவட்ட செயலகம் மற்றும் கல்வித் திணைக்களத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டம் 7வது கள பொறியியல் படையினர் மற்றும் 3வது கள பொறியியல் சேவை படையினரின் கடின உழைப்புடன் நிறைவுசெய்யப்பட்டது.
கனடாவில் உள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று 1.75 ஏக்கர் நிலப்பரப்பில் விளையாட்டு அரங்குடன் கூடிய விளையாட்டு மைதானத்தை நிர்மாணிப்பதற்கு தேவையான 6.25 மில்லியன் ரூபா நிதியை வழங்கியதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட அதிகாரிகள், வினாயநகர் வித்தியாலய அதிபர் திரு.வி.புஷ்பாஹரன், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தை மாணவர்களுக்காக திறந்து வைத்தனர்.