51வது பங்களாதேஷ் படைவீரர்கள் தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

நவம்பர் 22, 2022

கொழும்பு ஷாங்ரி-லா ஹோட்டலில் நேற்று மாலை (நவம்பர், 21) இடம்பெற்ற 51வது பங்களாதேஷ் படைவீரர்கள் தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன விஷேட அதிதியாக கலந்து கொண்டார்.

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் அதிமேதகு தாரிக் எம்.டி. ஆரிபுல் இஸ்லாம் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ஆண்டு தோறும் நவம்பர் 21ம் திகதி கொண்டாடப்படும் பங்களாதேஷ் படைவீரர்கள் தினமானது, இந்த வருடத்துடன் 51 ஆண்டுகள் பூர்த்தியாகி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ஜெனரல் குணரத்ன உரையாற்றுகையில், 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷின் விடுதலைப் போர் உலகின் சுதந்திர இயக்கங்களின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு என்றும், தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள அமைதியை விரும்பும் மக்கள் பங்களாதேஷ் படைவீரர்களின் தைரியம், துணிச்சல் மற்றும் தேசபக்திக்கு அதனை ஒரு உதாரணமாக கருதுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையில் பாதுகாப்பு உட்பட பல துறைகளில் வரலாற்றில் பேணப்பட்ட சிறந்த உறவின் முக்கியத்துவத்தையும் பாதுகாப்பு செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

குறித்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரால் பாதுகாப்பு செயலாளருக்கு நினைவுச்சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

பாதுகாப்பு படைகளின் பிரதான அதிகாரி, இராணுவம் மற்றும் விமானப்படைத் தளபதிகள், இராஜதந்திரிகள் மற்றும் இலங்கையின் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.