எங்களுக்கு மிகவும் தகுதியான, திறமையான மற்றும் தொழில்முறை அதிகாரிகள் தேவை - பாதுகாப்பு செயலாளர்
டிசம்பர் 05, 2022- தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த திருத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு கொள்கை
போர்க்களத்தில் வெற்றி தோல்வி என்பது போரின் பின்னணியை புரிந்து கொண்டு வெற்றியை தொடரும் துணிச்சலான தலைவரை பொறுத்தே அமையும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
ஒரு உத்தியோகத்தருக்கு நிபுணத்துவத்துடன் பின்னிப் பிணைந்த ஞானமும் அறிவும் முதன்மையாகக் கருதப்படுகின்றன, ஏனெனில் இவையே போரில் இறுதி நிலையைத் தீர்மானிக்கும். எனவே, எதிர்காலத்தில் எமது படைகளை சவாலானதொன்றை நோக்கி வழிநடத்துவதற்கு உயர் தகுதி வாய்ந்த, திறமையான மற்றும் நிபுணத்துவ அதிகாரிகளின் தேவை எமக்கு மிகவும் அவசியமானது என ஜெனரல் குணரத்ன குறிப்பிட்டார்.
கொழும்பில் உள்ள பாதுகாப்பு சேவைகள், கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் 'கற்கை நெறி இலக்கம் 16' மாணவர் உத்தியோகத்தர்கள் மத்தியில் இன்று (டிசம்பர் 05) விரிவுரையாற்றும் போது இந்த கருத்துக்களை தெரிவித்தார். உலகம் முழுவதிலும் உள்ள இராணுவக் கல்லூரிகளில் தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவ கற்கை நெறிகளில் பதவிநிலை அதிகாரிகள் கற்கை நெறி மிகவும் தேவைப்படும் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இராணுவம் தொடர்பான அனைத்து துறைகளிலும் கடமைகளை நிறைவேற்றுவதற்கு இராணுவத் தலைவர்கள் கடமைப்பட்டுள்ளனர் எனவும், மனிதனால் உருவாக்கப்பட்ட அல்லது இயற்கையான அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க ஒரு அதிகாரி தனது ஆட்களை சிறந்த முறையில் வழிநடத்த வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டார்.
நாட்டிற்கான வலுவான பாதுகாப்பு பொறிமுறையின் அவசியத்தை மேலும் குறிப்பிட்ட அவர், இரண்டு வருடங்களுக்கு முன்னர் வரையப்பட்ட நடைமுறையில் உள்ள தேசிய பாதுகாப்புக் கொள்கையை மீளாய்வு செய்வதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், மேலும் இலங்கையைப் பாதிக்கும் பரந்த பாதுகாப்பு பிரச்சினைககளை உள்ளடக்கிய, எதிர்கால மற்றும் விரிவான முறையின் ஊடாக திருத்தப்பட்ட 'தேசிய பாதுகாப்பு கொள்கை மற்றும் மூலோபாயம்' தேசிய பாதுகாப்பு பொறிமுறையை வலுப்படுத்த புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அச்சுறுத்தல்களைத் தணிக்கவும், பாதுகாப்பான மற்றும் வளமான நாட்டை உறுதிப்படுத்தவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேசிய பாதுகாப்பு திட்டங்களுக்கு தெளிவான மற்றும் சுருக்கமான கட்டமைப்பை வழங்கும் என்று பாதுகாப்புச் செயலாளர் மேலும் கூறினார்.
பாதுகாப்பு சேவைகள், கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் பாடத்திட்டங்களை நடைமுறை படுத்தும்போது, பாதுகாப்பு கல்லூரியின் நற்பெயரையும் உயர் தரத்தினையும் நிலைநிறுத்த பாதுகாப்பு கல்லூரியின் கட்டளைத் தளபதி மற்றும் ஊழியர்கள் எடுக்கும் திடமான முயற்சிகளுக்காக பாதுகாப்புச் செயலாளர் அவர்களை பாராட்டினார்.
உரையின் முடிவில் அனைத்து மாணவர் அலுவலர்களின் எதிர்கால முயற்சிகள் வெற்றியடைய அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, பாதுகாப்புச் செயலாளருக்கும் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவுக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன. ஜெனரல் குணரத்ன அவர்கள் தான் எழுதிய “ரோட் டு நந்திக்கடல்” புத்தக பிரதிகளை இதன்போது பாதுகாப்பு கல்லூரிக்கு அன்பளிப்பு செய்தார்.
பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார, பாதுகாப்பு கல்லூரியின் முப்படைகளின் பிரதான பயிற்றுவிப்பாளர்கள், பீட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு இராணுவ மாணவர்கள் உட்பட மாணவர் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.